×

2ம் தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: சென்னையில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள  இன்றும், நாளையும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 கோவிட் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து சுமார் 89,500 நபர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.  

எனவே, மாநகராட்சி சார்பில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி,  தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 30,480 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.  மேலும், தற்போதைய நிலவரப்படி சுமார் 59,000 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.  
இவர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு இன்று (23ம் தேதி), நாளை (24ம் தேதி) ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த இரண்டு நாள் கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு  ஏற்பாட்டிற்காக 62,050 கோவேக்சின் தடுப்பூசிகள் அனைத்து தடுப்பூசி முகாம்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.  பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_centers/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே, கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.  இவ்வாறு கூறப்படுள்ளது.

Tags : Kovacs , Special camp today and tomorrow to get the 2nd installment of Kovacs vaccine: Organized by the Corporation
× RELATED தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் வருகை