அதிமுக அரசு 9 மாதமாக பராமரிப்பு பணி செய்யாததால் தான் மின் தடை 10 நாட்களில் தடையில்லா மின்சாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் காரசார கேள்வி; அமைச்சர் செந்தில்பாலாஜி ‘கூல்’பதில்

சென்னை: அதிமுக அரசு கடந்த 9 மாதமாக பராமரிப்பு பணிகளை  செய்யாததால் தான் மின் தடை ஏற்படுகிறது என்றும், அந்த பணிகள் இன்னும் 10  நாட்களில் முடிந்த பின்பு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும்  அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.   பேரவையில் அதிமுக எம்எல்ஏ சு.ரவி: கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் போது  மதுக்கடைகளை திறந்திருக்கிறீர்களே?   அமைச்சர் செந்தில் பாலாஜி:  தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11  மேற்கு மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: கொரோனா பாதிப்பு அப்போது குறைவு.  ஆனால், மதுக்கடைகளை மூடச் சொன்னார்கள். இப்போது, கொரோனா பாதிப்பு அதிகம்.  அதனால், எங்கள் உறுப்பினர் மதுக்கடைகளை மூடலாம் என்று கூறினார். இதில்  எந்த தவறும் இல்லை. ஆனால், அமைச்சர் அதை மறைத்து பேசுகிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கடந்த மாதம் (மே) 7ம்தேதி வரை அதிமுக அரசு தான்  காபந்து அரசாக செயல்பட்டது. அன்றைய தினம் கொரோனா பாதிப்பு 26,405 ஆக  இருந்தது.  எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில்  26-2-2021 அன்று 481 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. அப்போது,  சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும்  அமலுக்கு வந்தது. அதனால், அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. அமைச்சர்  எ.வ.வேலு: 26-2-2021-க்கு பிறகு தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகும்  அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர்  பேட்டியளித்தார். அரசு செயல்பட்டு கொண்டுதானே இருந்தது. எடப்பாடி பழனிசாமி: அவர் பேட்டி கொடுத்திருக்கமாட்டார். தேர்தல் நடத்தை  விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. இது ஒரு புதிய நோய். ஒற்றுமையாக  இருந்து செயல்பட வேண்டிய நேரம். அவை முன்னவர் துரைமுருகன்: நீங்கள் ஆட்சியில் இருந்தபோது நோயின்  வீச்சைப் பொறுத்து அதை கட்டுப்படுத்துனீர்கள். நாங்களும் நோயின் வீச்சைப்  பொறுத்து இப்போது கட்டுப்படுத்தினோம். இந்த பிரச்னையை இதோடு  விடுங்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின்வாரிய  பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், தற்போது மின்தடை ஏற்படுகிறது. போர்க்கால அடிப்படையில்  இப்பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம்: திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்தடை ஏற்படுகிறது என்றுதான்  உறுப்பினர்  கூறினார். ஆனால், அமைச்சரோ மின் தடைக்கு 9 மாதம்  பராமரிப்பு இல்லை என்று காரணம் சொல்கிறார். மின் தடை என்பது 9 மாதம்  இல்லை. கடந்த ஒரு மாதமாகத்தான் இருக்கிறது. அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி: 9  மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார். சென்னையில்  புதைவடமாகத்தான் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இங்கே ஏன்  மின்தடை வருகிறது. எந்த மாநிலமும் சொந்தமாக மின்சாரத்தை தயாரித்து,  மின்மிகை மாநிலமாக முடியாது.

(மன்னார்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எழுந்து தங்கமணி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்) அமைச்சர்  செந்தில்பாலாஜி: சென்னையில் பில்லர் உள்ளது. அதில், பியூஸ் போனால்  பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அது தெரியுமா?. கடந்த ஆட்சியில் ஒரு  யூனிட் மின்சாரம் 3.50 பைசாவுக்கு தர பல்வேறு நிறுவனங்கள் தயாராக  இருந்தது. ஆனால் 7 வரை கொடுத்து தனியாரிடம் இருந்து கொள்முதல்  செய்திருக்கிறார்கள். ஒரு ஆண்டில் அந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம்  கொள்முதல் செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் 4,300 கோடி  கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதை தான் ஆளுநர் உரையில் தெளிவாக  குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள் ஆய்வு  செய்யப்படும். குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று தெளிவாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரே திட்டத்துக்கு 5 முறை அறிவிப்புகளை கொடுத்த  அரசு கடந்த அரசு. இதையெல்லாம் சீர்தூக்கி சீர் செய்ய வேண்டும் என்று  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, நடைபெற்று வரும் மின் பராமரிப்பு  பணிகள் 10 நாட்களில் முடியும். அதன்பிறகு தடையில்லா மின்சாரம்  வழங்கப்படும்.

Related Stories: