×

மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ, வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது திமுக உறுப்பினர் தமிழரசி (மானாமதுரை) பேசியதாவது:   உழவர்களின் நலன் கருதி வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உழவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் உழவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்த மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மூன்று  வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.
 
ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான  விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய ஜூலை மாதத்தில் வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது, அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

 அதைப்போலவே, இன்னொன்று - ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுவதில் எந்த மாற்றமும் கிடையாது.
* முதல் கூட்டத்தொடர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது தீர்மானத்தை நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது.
* வரும் ஜூலை மாதத்தில் வரவு-செலவு திட்டக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வந்து, நிச்சயமாக ஒன்றிய அரசு திரும்ப பெற உறுதியோடு வலியுறுத்துவோம்.


Tags : Central Government ,Chief Minister ,MK Stalin ,Legislature , Resolution against CAA, Agriculture Act brought by the Central Government: Budget will be passed in a series of meetings: Chief Minister MK Stalin's announcement in the Legislative Assembly
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...