×

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பவார் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக சரத்பவார் தலைமையில் இன்று முக்கிய கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார்.

ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்துப் பேசினார்.

மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை நேற்று மீண்டும் சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத்பவார் அழைப்பு விடுத்தார். அதன்படி சரத் பவார் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்றன.

கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்தன. அடுத்த ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது பற்றியும், உ.பி. தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகம் வகுப்பது பற்றியும் முதற்கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.



Tags : Congress ,Delhi ,Saratpawar , sharad pawar
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...