திருமணம் குறித்து தவறான தகவல் கொடுத்த எம்பி நுஸ்ரத் மீது தார்மீக விசாரணை தேவை: மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்பி கடிதம்

லக்னோ: திருமணம் குறித்த தவறான தகவலை நாடாளுமன்றத்தில் கொடுத்த எம்பி நுஸ்ரத் மீது தார்மீக விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்பி கடிதம் எழுதியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், துருக்கி நாட்டின் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அண்மை காலமாக நுஸ்ரத் ஜஹான் தன் கணவரை பிரிந்துவிட்டதாகவும், அது சட்டப்படி நடைபெறவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது. மேலும் நுஸ்ரத் ஜஹான் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்திய நாட்டின் சட்டப்படி எங்களுக்கு நடைபெற்றது திருமணமே இல்லை. அதனால் விவாகரத்துக்கான தேவையே எழவில்லை.

எங்களுடைய பிரிவு வெகுநாட்களுக்கு முன்பே நடந்துவிட்டது. இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்’ என்றார். இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் படான் நகரைச் சேர்ந்த பாஜக எம்பி சங்கமித்ரா மவுரியா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘திரிணாமுல் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜஹானின் தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் அத்துமீறக்கூடாது. ஆனால் அவரது திருமணம் குறித்து வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது அவர் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது. எனவே, நுஸ்ரத்தின் சட்டவிரோத மற்றும் தார்மீக நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

இவரது செயல் நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களின் பெயரைக் கெடுக்கிறது. நுஸ்ரத் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால், அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து நெறிமுறைக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும். எம்பியாக உள்ள நுஸ்ரத் மக்களவை சபாநாயகருக்கு அளித்துள்ள சுயவிபரத்தில், அவரது கணவரின் பெயர் நிகில் ஜெயின் என்றும், ஜூன் 25, 2019 அன்று திருமணம் செய்து கொண்டதும் கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>