×

மோடி அரசுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்கட்சிகள்; 3வது அணிக்கு மம்தா தலைவர்; சரத்பவார் ஒருங்கிணைப்பாளர்?.. இன்று மாலை டெல்லியில் 15 கட்சி தலைவர்கள், பிரபலங்கள் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் பணிகள் தொடங்கிவிட்டன. மூன்றாவது அணி உருவாக்கப்பட்டு அதற்கு மம்தா தலைவராகவும், சரத்பவார் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் தவிர பல மாநிலங்களின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தல் மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளால் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜகதீப் தங்கர் இடையே மோதல் தொடர்கிறது. அதனால், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க மம்தா முயன்று வருகிறார்.

ஏற்கனவே, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகள் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று தனது தேர்தல் கூட்டங்களில் மம்தா கூறியிருந்தார். மம்தாவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, மும்பையில் கடந்த 11ம் தேதி பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். இரண்டு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக நேற்றும் சந்தித்து பேசினார். ரகசியமாக நடந்த இந்த சந்திப்பின்போது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும், மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது நடக்கும் அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் பார்த்தால், ‘ராஷ்டிரா மஞ்ச்’ என்ற பேனரின் கீழ் 15 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒருங்கிணைய உள்ளனர். இதில், என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று முதல் முறையாக நடக்கிறது. இதுகுறித்து என்சிபி வட்டாரங்கள் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு டெல்லியில் (இன்று) நடைபெறும் கூட்டத்தில் என்சிபி தலைவர் சரத்பவார் கலந்து கொள்கிறார்.

மேலும், பரூக் அப்துல்லா, யஷ்வந்த் சின்ஹா, பவன் வர்மா, சஞ்சய் வர்மா, சஞ்சய் சிங், டி.ராஜா, ஜாவேத் அக்தர், கே.டி.எஸ் துளசி, கரண் தாப்பர், அசுதோஷ், வழக்கறிஞர் மஜித் மேமன், வந்தனா சவான், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கே.சி.சஞ்சய் ஜா, சுதீந்திர குல்கர்னி, கொலின் கோன்சலஸ், பொருளாதார நிபுணர் அருண்குமார், கன்ஷ்யம் திவாரி, பிரிதிஷ் நந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அரசியல் கூட்டணியாக அமையாவிட்டாலும் கூட, எதிர்காலத்தில் மூன்றாவது அணியாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த சந்திப்பு 2024 மக்களவைத் தேர்தலுக்கான முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.

சரத்பவார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பில் 3 முக்கியமான விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 2024 பொதுத் தேர்தலை எதிர்கொள்ள மூன்றாவது அணியை ஏற்படுத்த வேண்டும். மேற்குவங்க முதல்வர் மம்தாவை மூன்றாவது அணியின் முகமாக மாற்ற வேண்டும். மூன்றாம் அணியின் ஒருங்கிணைப்பாளராக சரத்பவார் தேர்வு செய்யப்பட வேண்டும் ஆகிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ராஷ்டிரா மஞ்ச்’?
மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டில், பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, ‘ராஷ்டிரா மஞ்ச்’ (தேசிய மன்றம்) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவர், தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், 2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கியுள்ளார். அதற்கான கூட்டத்தை ‘ராஷ்டிரா மஞ்ச்’ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Modi government ,Mamta ,Sarabjit Coordinator ,Delhi , Opposition parties unite against Modi government; Mamta captains the 3rd team; Sarabhavar Coordinator? .. Meeting of 15 party leaders and celebrities in Delhi this evening
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...