×

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி : மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய கர்நாடக முதல்வரை கண்டிப்பது, இந்த விவகாரத்தில் மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டிப்பது, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கி கொள்முதல் தடையின்றி நடைபெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுக்கும் உரிமையை கடந்தாண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதை மறுபரிசீலனை செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட பாசன ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட ஆய்வு குழுவை அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்டா மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பஸ் நிலையம் எதிரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று கண்டன குரல் எழுப்பி கோஷம் போட்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காவிரி ஆற்றுப்பாலம் அருகே காவிரி ஆற்றில் விவசாயிகள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவபொம்மையை ஆற்றில் வீசி ஆவேசமாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Tags : Khaviri ,Maehara , Cauvery, Megathathu Dam,Tiruchi
× RELATED கர்நாடக அணைகளில் இருந்து காவிரி...