×

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது கோர விபத்து 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

* பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
* வெம்பக்கோட்டை அருகே பயங்கரம்


சிவகாசி : வெம்பக்கோட்டை அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள், சிறுவன் உட்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாயின. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டியைச் சேந்தவர் பிரபாகரன் (32). இவரது தம்பி சூர்யா (30). இருவரும் வீட்டில், தடை செய்யப்பட்ட கெமிக்கல் பொருளான, குளோரேட் மூலப்பொருளைப் பயன்படுத்தி வெடிபொருள் தயாரித்து வந்துள்ளனர். அங்கு, இதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் மனைவி கற்பகவள்ளி (35) நேற்று காலை வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் கற்பகவள்ளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தால் அருகே வசித்த அப்பலோ மனைவி செல்வமணி (30), அவரது மகன் ரொகோபியா சல்மான் (5) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வில் அருகேயிருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. அத்துடன் எதிர்வீட்டில் வசித்து வந்த சோலையம்மாள் (65) என்ற மூதாட்டியின் கால்கள் துண்டானது. பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சூர்யா படுகாயமடைந்தார். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வந்த அன்னபாக்கியம், அந்தோணியம்மாள், காளிராஜ், கிருபா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் தாயில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களம் ராமசுப்பிரமணியன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், சாத்தூர் டிஎஸ்பி நாகராஜ் நேரில் வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரன் மற்றும் உறவினர் அப்பலோ ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த வீட்டின் அருகே வசிக்கும் பிரபாகரன் கூறுகையில், ‘‘எனது வீட்டின் பின் பகுதியில் தான் விபத்து நடந்தது. முதலில் லேசான சத்தம் கேட்டவுடன் எனது குழந்தைகளை அழைத்து கொண்டு ஓடி விட்டேன். இரண்டாவதாக பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. கற்பகவள்ளி உடல் 500 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு உடல் பாகங்கள் மின்கம்பம், மரக்கிளைகளில் தனித்தனியாக தொங்கியது. அனுமதியன்றி பட்டாசு தயாரிப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசாரின் அலட்சியத்தால் தற்போது 3 உயிர்கள் பலியாகியுள்ளது’’ என்றார்.


எப்படி நடந்தது விபத்து?

‘‘தாயில்பட்டி வெடி விபத்தில் குளோரேட் கெமிக்கல் கொண்டு பட்டாசு தயாரித்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் தடை விதித்துள்ளனர். அதிக சத்தத்துடன் பட்டாசு வெடிக்கும் என்பதால் இதுபோன்ற மூலப்பொருளை கொண்டு வீடுகளில் பட்டாசு தயாரிப்பது தற்போது அதிகரித்துள்ளது. உரிமம் பெற்ற தீப்பெட்டி ஆலைகளுக்கு மட்டுமே இந்த கெமிக்கல் விற்பனை செய்யப்படும். வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் உரிய உரிமம் இல்லாமலே இந்த மூலப்பொருளை கொண்டு பட்டாசு தயாரித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த மூலப்பொருளை விற்பனை செய்ய முடியும். சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்களுக்கு இந்த மூலப்பொருளை விற்பனை செய்வதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

உயிர் குடிக்கும் லாபவெறி

வெம்பக்கோட்டை காவல்நிலைய சரக பகுதியில் வீடுகளில் முன்பு அனுமதியின்றி சரவெடி, கருந்திரி போன்ற இலகு ரக பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. தற்போது அதிக லாபநோக்கத்துடன் பேன்சி ரக பட்டாசு, குளோரேட் மூலப்பொருள் கொண்டு பட்டாசு தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அருகில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Sivakasi,Accident, Cracker accident
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...