×

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு கடிதம் 13 பேரின் இறப்புக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அரியலூர் மாணவி அனிதாவின் தந்தை உருக்கம்

அரியலூர்:  நீட் தேர்வில்  தோல்வியடைந்ததால் மருத்துவராகும் கனவு பறிபோய் தற்கொலை செய்து கொண்ட  அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் (55), நீதிபதி ஏ.கே.ராஜன்  தலைமையிலான குழுவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர்  கூறியிருப்பதாவது:
மூட்டை தூக்கும்  தொழிலாளியாக இருந்து வருகிறேன். என் மனைவி இறந்துவிட்டதால், வறுமையிலும், பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விட  வேண்டும் என்று நான் ஒட்டுமொத்த உழைப்பையும்  பிள்ளைகளின் கல்விக்காக மட்டுமே செலவழித்தேன். எனது  மகள் அனிதா சிறு வயதிலிருந்து டாக்டருக்கு தான் படிப்பேன் என்று உறுதியுடன்  படித்து வந்தார். அனிதா  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 478/500 மதிப்பெண்கள் பெற்றார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176/1200 (கணிதம்-200, இயற்பியல்-200,  வேதியியல்-199, உயிரியல்-194, தமிழ் -195, ஆங்கிலம்-188) மதிப்பெண்கள்  பெற்றார்.

அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலைசிறந்த முதல் இரண்டு  மருத்துவக்கல்லூரிகளில் பயில்வதற்கு போதுமானது. நானும், என்  குடும்பமும் எப்படியும் என் மகள் அனிதா டாக்டராகி விடுவார் என்று  நினைத்த வேளையில்தான், மத்திய அரசு ‘‘நீட்’’ தேர்வை தமிழ்நாட்டின் மீது  திணித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வந்தவர்கள்  தமிழ்நாட்டின் கல்வி உரிமையை காக்க தவறிவிட்டனர். இந்நிலையில்,  தமிழ் நாட்டுக்கு ஓராண்டு விலக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து  பின்வாங்கியதால், உச்சநீதி மன்றம் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே  மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று 22.8.2017 அன்று தீர்ப்பளித்தது.

இத்தகைய  சூழலில்தான் என் மகள் அனிதா, தனது மருத்துவராகும் கனவு நிறைவேறாத  வேதனையில் 2017 செப்டம்பர் 1ம் தேதி தன் உயிரை மாய்த்து கொண்டார். நீட் தேர்வால் என் மகளைப் போன்று பல அனிதாக்களின் கனவுகள் சிதைக்கப்பட்டு 13 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஒருவேளை  என் மகள் ஒரு ஆண்டு முன்கூட்டியே பிறந்திருந்தால் அவர் விரும்பிய டாக்டர்  படிக்கும் வாய்ப்பை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலே பெற்றிருந்திருப்பார்.  அல்லது ஒரு ஆண்டு கடந்து பிறந்திருந்தால் அரசின் குழப்பத்திற்கு ஆளாகாமல்  தனக்கு சம்பந்தமே இல்லாத நீட் தேர்வுக்கும் தயாராகி இருப்பார். எது  எப்படியோ உயிரோடு இருந்திருப்பார்.

நீட் ஆதரவாளர்கள் கூறும்  முதன்மையான காரணம் ‘‘தகுதி’’யின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதுதான்.  1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற என் மகளுக்கு மருத்துவம் படிக்க ‘‘தகுதி’’  இல்லையென்று மறுத்து, நீட் தேர்வில் 720க்கு 150 மதிப்பெண்ணுக்கு குறைவாக  எடுத்திருந்தாலும், பணமிருந்தால் அவர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை  பெறுகிறார். அவர்கள் சொல்லும் தகுதி காற்றில் பறக்கிறது. மாணவர்களின்  உயிரைக்குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rajan group ,Arrialur ,Anita , Judge AK Rajan, Panel, NEET Exam, Student Anita
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...