×

எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளோம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சென்னை குருநானக் கல்லூரிக்கு அறிவுறுத்தி உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே. கன்னையன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு விண்ணப்பத்திற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும்  உயர்கல்வித் துறை ஆகியவை அரசாணைகள் பிறப்பித்த நிலையில், அதை மீறும் வகையில் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த அறிக்கையில், விண்ணப்ப கட்டண வசூல் புகார் குறித்து உயர் கல்வித் துறை இணை இயக்குனர் சென்று விசாரணை நடத்தினார். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணத்தை கல்லூரி வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது.

 அந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி செலுத்த வேண்டுமென்று கல்லூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்க கூடாது என்று கல்லூரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் அந்த அறிக்கையை மனுதாரருக்கு கொடுக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : SC ,ST ,Chennai ,iCourt , SC, ST Application fee to students We have advised not to charge: Chennai Government information in iCourt
× RELATED பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்