×

இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தி டாலர்களில் சம்பாதிக்கும் மாணவி: கொரோனா ஊரடங்கு காலத்தில் சாமர்த்தியம்

திருச்சி: திருச்சி உறையூரை சேர்ந்தவர் விஸ்வதிகா (26). பெங்களூருவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வருகிறார்.  கொரோனா ஊரடங்கால், தற்போது வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வரும் இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் தனது உறவினரின் குழந்தைக்கு ஆன்லைன் மூலம் வேதியியல், இயற்பியல் பாடங்களை எதேச்சையாக நடத்தி உள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது ஆங்கில புலமை, அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப திறமை ஆன்லைன் வகுப்புக்கு கைகொடுக்கவே, இணையத்தில் தனது பெயர், முகவரியை விஸ்வதிகா பதிவிட்டார்.

இதையடுத்து, லண்டனை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி ஆலியா (10) கம்ப்யூட்டர் புரோகிராம் கற்பதற்காக அவரது வகுப்பில் சேர்ந்தார். தற்போதைய நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 20 குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல ஆயிரம் டாலர்களை விஸ்வதிகா சம்பாதித்து வருகிறார்.  இதே போல் பல மாணவர்கள் அவரது வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையில் விஸ்வதிகாவுக்கு இருக்கும் திறமையை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் எளிய முறையில் வகுப்புகளை நடத்தி மாணவர்களை கவர்ந்துள்ளார்.

இது குறித்து விஸ்வாதிகா கூறுகையில், ‘‘சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் குறுகியகால ஆங்கில பயிற்சி முடித்து உள்ளேன். இது சர்வதேச மாணவர்களை தொடர்பு கொள்ள உதவியது. ஆங்கிலத்தில் இந்திய உச்சரிப்பு இருந்தாலும், அமெரிக்க மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. பகலில் கல்லூரி ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படிக்கிறேன். மாலையில் வெளிநாட்டு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துகிறேன். இதன் மூலம் கற்பிப்பதில் எனக்கு இருந்த ஆர்வம் நிறைவேறி உள்ளது. ஆன்லைன் கல்விக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் பள்ளிகளும் அமையும் காலம் வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.

Tags : UK ,USA ,New Zealand ,Corona , For UK, US and New Zealand students Student earning in online class conductors: Dexterity during corona curfew
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...