×

கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னம் ஒதுக்குவது குழப்பத்தை ஏற்படுத்தும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க கோரி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள், இதுபோல் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை.  சின்னங்கள் பட்டியலை வெளியிட்டு, அதை  ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தியுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில்,  தேர்தலின் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை அடையாளம் காண, சின்னங்கள் அவசியமாகின்றன. இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிரந்தர சின்னங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்கு சில வரையறைகள் உள்ளன. நாட்டில் கல்வியறிவு அதிகரித்திருந்தாலும், தேர்தல் நேரங்களில் விரைந்து வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்பதற்காகவும்,  வாக்காளர்களின் வசதிக்காக சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னங்களை ஒதுக்கினால் அது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.

சின்னங்களை பிரபலப்படுத்த அரசு நிதியையோ, அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தினால், சின்னத்தை திரும்பப் பெறுவது, தேர்தலை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பு வக்கீல் சக்திவேல் அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணை 3 வாரங்களுக்கு நீதிபதிகள்  தள்ளிவைத்தனர்.

Tags : Election Commission ,High Court , Case against assigning permanent logo to parties Assigning a new symbol in every election will cause confusion: Election Commission reply petition in the High Court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...