×

கலைஞரின் கொள்கைகள் தமிழக அரசை வழிநடத்தி செல்லும்: கவர்னர் உரையில் அறிவிப்பு

சென்னை: கலைஞரின் கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் தமிழக அரசு கூறி இருப்பதாவது: திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் 60 ஆண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும்.

 மக்களாட்சியின் மாண்பின்மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை தொடர்ந்து பின்பற்றும் வகையில், ஓர் உண்மையான குடியரசின் உயிர்நாடியாக விளங்கும் நமது மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்பு சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த அரசு உறுதியாக உள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்.

இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதை கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவை பேணும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

69% இடஒதுக்கீடுபாதுகாப்பு
100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு கொள்கை, காலத்தை  வென்று, சமூகநீதியை உறுதி செய்துள்ளது.  இந்த வகையில், தற்போது  தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து  பாதுகாக்கப்படும்.

மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள்
சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும், சென்னை-பெங்களூரு  தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

தொழில் வளர்ச்சிக்கு நிபுணர் குழு
தொழில்  துறையில் தொழில்நுட்ப  மேம்பாட்டினை உறுதிப்படுத்துவதும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து துறைகளிலும், பன்முக தொழில் வளர்ச்சியை  உறுதி செய்வதுமே  தமிழ்நாட்டின் தொழில் கொள்கையின் நோக்கங்கள் ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக,  தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள்,  அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்.


நிதிநிலை குறித்து ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் இச்சூழ்நிலையில், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவது இந்த  அரசின் தலையாய கடமையாகும். இந்த வகையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் அரசு முழு கவனம் செலுத்தும். இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசு கவர்னர் உரையில் அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Governor , The artist's policies will guide the state of Tamil Nadu: Announcement in the Governor's speech
× RELATED சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி...