×

ஊரடங்கில் புதிய தளர்வுகள் எதிரொலி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது: பஸ், மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்; கடைகள் இரவு 7 மணி வரை திறப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கில் அறிவித்த புதிய தளர்வுகளின் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் ஓடியது.  பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி கடந்த 7ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பலசரக்கு, மீன், இறைச்சி கடைகள், ஹார்டுவேர், பிளம்பர் பணி உள்ளிட்டவைகளுக்கு நேர கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 28ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு புதிய தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் வகை 1ல் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் ஏதும் இன்றி பழைய நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஏனைய 27 மாவட்டங்களில் நேரத் தளர்வுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதிக்கப்பட்டது.  அதன்படி, நீட்டிக்கப்பட்ட ஒரு வார ஊரடங்கு நேற்று முதல் அமலாகியது. குறிப்பாக, வகை 2ல் இருந்த 23 மாவட்டங்களில்  மளிகை, பலசரக்குகள், காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன.

உணவகங்கள், பேக்கரிகள் இரவு 9 மணி வரை இயங்கியது. அரசின் அத்தியாவசிய துறைகள் அனைத்தும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது. ஹார்டுவேர், காலணிகள் விற்பனையகம், ஆப்டிக்கல்ஸ் கடைகள், செல்போன் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன. இதேபோல், சுயதொழில் செய்பவர்கள் இ-பதிவு பெற்று தங்களின் பணிகளை மேற்கொண்டனர். வாடகை டாக்ஸிகள் இ-பதிவு பெற்று ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். வகை 3ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. காலை 6 மணி முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு இருக்கையில் ஒருவர் வீதம் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டனர்.

கைகளில் சானிடைசர் தெளித்த பிறகே டிக்கெட் கொடுக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்திருக்கும் பயணிகள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், சென்னையில் மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் இயங்கியது. கூட்ட நெரிசலை தவிர்க்க சமூக இடைவெளிக் கோடுகளில் நிற்கவைக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 50 சதவீத பயணிகள் மட்டுமே ரயில் பெட்டிகளின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் சிரமத்தை போக்க கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் எனவும் இயக்கப்பட்டது. ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டன.

காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட்டது. அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும் நேர கட்டுப்பாடின்றி நடந்தது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். மின் பொருட்கள் விற்பனையகம், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், ஜெராக்ஸ், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அரசு அனுமதித்த கடைகள் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி இரவு 7 மணி வரை இயங்கியது. இதனால், 4 மாவட்டங்களிலும் நேற்று பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இதேபோல், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு இ-பதிவு இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்னரே வாகனங்களை செல்ல அனுமதித்து வருகின்றனர். ஒவ்வொரு தெருக்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு நோயின் தீவிரம் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.

2,500 பேருந்துகள் இயக்கம்
மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நேற்று 1,800 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் 750 பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. இரண்டு போக்குவரத்துக் கழகங்களும் சேர்த்து நேற்று 2,550 பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல்நாள் என்பதால் நேற்று பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்று முதல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பரபரப்பானது கோயம்பேடு
எப்போதும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பொது போக்குவரத்துக்கு தடை காரணமாக பேருந்துகள் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் பஸ்கள் இயங்கத் தொடங்கின. வெளியூர் செல்லும் பயணிகள் வௌியூர் பேருந்து நிறுத்தத்திற்கும், மாநகருக்குள் பயணிப்பவர்கள் எம்டிசி பஸ் நிறுத்தத்திற்கும் அதிக அளவில் வந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது.


Tags : Chennai , Echo of new relaxations in curfew Normalcy returned to 4 districts including Chennai: Bus, Metro rail service resumed; Shops are open until 7 p.m.
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...