சசிகலாவை கடுமையாக விமர்சித்ததை கண்டித்து அமமுக-வினர் போராட்டம் - அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு..!!

திண்டுக்கல்: சசிகலாவுக்கு எதிராக பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து  அமமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் நத்தம் விஸ்வநாதன். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முப்பெரும்துறை அமைச்சராக இருந்து வந்தார். 

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராவும் இருந்து வந்தார். தற்போது சசிகலா கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆதரவாளர்களுடன் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவதூறாக பேசி இருந்தார். 

மேலும் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நத்தம் பேருந்து நிலையம் எதிரே அமமுக தொண்டர்கள் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

Related Stories: