×

சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுக நிர்வாகியின் கார் தீ வைத்து எரிப்பு: மாஜி அமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பரமக்குடி: சசிகலாவுடன் போனில் பேசி, அதை பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பரமக்குடியை சேர்ந்த அதிமுக நிர்வாகியின் காருக்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்த அவரது தோழி சசிகலா, தற்போது ஆடியோ அரசியல் செய்து வருகிறார். அதிமுக நிர்வாகிகளிடம் செல்போனில் பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக இருந்த வின்சென்ட் ராஜாவுடனும், சசிகலா போனில் பேசினார். பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜாவுக்கு அப்பகுதியில் சொந்தமாக கான்கிரீட் மிக்ஸிங் நிறுவனம் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, இவருடன் சசிகலா போனில் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக கட்சி மேலிடம் நீக்கியது.

நேற்றிரவு கான்கிரிட் மிக்ஸிங் நிறுவனத்தில் பணியில் உள்ள காவலாளி வேலைக்கு வரவில்லை. இதனையடுத்து நிறுவன வளாகத்தில் தனது சொசுகு காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள அறையில் வின்சென்ட் ராஜா தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்த அவர், அறைக்கு வெளியே வந்து பார்த்தார். அங்கு அடையாளம் தெரியாத சிலர், கார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டிருந்தனர். கார் தீப்பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. வின்சென்ட் ராஜாவை பார்த்ததும், அவர்கள் தப்பியோடி விட்டனர். இதில் அதிர்ச்சியடைந்த வின்சென்ட் ராஜா, தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் தீயில் முற்றிலும் எரிந்து கார் நாசமானது. இது குறித்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். பரமக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வின்சென்ட் ராஜா கூறுகையில், ‘‘சசிகலாவுடன் போனில் பேசிய பிறகு, நான் அளித்த பேட்டியில் அதிமுகவின் படுதோல்விக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்று கடுமையாக குற்றம்சாட்டியிருந்தேன். முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முனியசாமியின் ஆதரவாளர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

Tags : Sasicila ,Maji Minister , Sasikala, AIADMK executive, car burning
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்