குறையும் கொரோனா தொற்று!: 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

சென்னை: 1.13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் 17ம் தேதி வரை 1 கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 690 டோஸ் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து, 1 கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருபவர்களுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளை பொறுத்தமட்டில் தற்போதைய சூழலில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், அதுமட்டுமின்றி கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அதற்கான பட்டியலும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்திருக்கிறார்கள். 

Related Stories:

More
>