×

யூரோ கோப்பை கால்பந்து: இத்தாலி, வேல்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி

ரோம்: யூரோ கால்பந்து தொடரில் குரூப் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியடைந்த வேல்ஸ் அணியும் கோல் கணக்கின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஸ்விட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. ரோமில் நேற்று நடந்த இத்தாலி-வேல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் விறுவிறுப்பாக துவங்கியது. வலுவான இத்தாலி அணியின் வீரர்களுடன், வேல்ஸ் வீரர்களும் சரிக்கு சரியாக மோதினார்கள். இத்தாலியின் தாக்குதல்களை வேல்ஸ் அணி வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து, தவிக்க விட்டார்கள்.

ஆனால் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இத்தாலி அணியின் மிட்ஃபீல்டர் மேட்டியோ பெஸ்சினா, அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் இத்தாலி வீரர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. பின்பாதி ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் இத்தாலி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தையே கடைபிடித்து, வேல்ஸ் அணி கோல் ஏதும் போடாமல் பார்த்துக் கொண்டார்கள். இறுதியில் இப்போட்டியில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ‘ஏ’ பிரிவில் இத்தாலி அணி 3 போட்டிகளில் ஆடி, மூன்றிலுமே வெற்றி பெற்று அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த வேல்ஸ் அணி, கோல் கணக்கின் அடிப்படையில் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்விட்சர்லாந்து-துருக்கி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று பாகு நகரில் (அஜர்பைஜான்) நடந்தது. இப்போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணி, துருக்கியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இருப்பினும் ஸ்விட்சர்லாந்து அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்த துருக்கி அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் போட்டியில் குரூப் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து-வடக்கு மெசடோனியா அணிகள் மோதுகின்றன. இப்பிரிவில் நெதர்லாந்து அணி, ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. புகாரெஸ்ட்டில் இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் உக்ரைன் அணி, ஆஸ்திரியாவை எதிர்த்து மோதவுள்ளது.  இந்திய நேரப்படி இன்று இரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள குரூப் ‘பி’ பிரிவு போட்டிகளில் ரஷ்யா, டென்மார்க்கை எதிர்த்தும் பெல்ஜியம், பின்லாந்தை எதிர்த்தும் மோதவுள்ளன.

Tags : Euro Cup Football ,Italy ,Wales , Euro football trophy
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்