நாகை மாவட்டத்தின் கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது!: நெல்மணிகள், மலர்தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு..!!

நாகை: நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை அடுத்து விவசாயிகள் ஆற்றில் நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றார்கள். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 

தொடர்ந்து 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்ட நிலையில், திருவாரூர், நாகை மாவட்டங்களின்  கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் வந்து சேர்ந்தது. நாகை மாவட்டத்தின் கடைசி நீர் ஒழுங்கியான இளையான்குடி பாண்டவி ஆற்றில் வந்து சேர்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும்  உற்சாகமாக வரவேற்றார்கள். 

மலர்கள் மற்றும் நெல்மணிகள் தூவி விவசாயிகள் வரவேற்க, பெண்கள் கும்மிப்பாட்டு பாடி ஆரத்தி எடுத்து காவிரி தாயை வணங்கினார்கள். உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

8 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நீர் இரண்டாவது முறையாக கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால் காவிரி டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்திருப்பதால் குறுவை சாகுபடி பணிகள் தொடங்குவதன் 13 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள். 

Related Stories:

More
>