×

எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை : எழும்பூர் அரசு  குழந்தைகள் நல மருத்துவமனையில் மூன்றாவது அலை சமாளிக்கும் வகையில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத  குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலையை சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக முதல்வர் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (ஜீரோ-டிலே) குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவையும் பார்வையிட்டார்.

இப்பிரிவுகளில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கருவிகளும், ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 3,500 படுக்கை தயார்

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:குழந்தைகளுக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்த பட்சம் 100  படுக்கைகள், அதில் 25 ஐசியூ  படுக்கைகள் உட்பட அனைத்து படுக்கைகளும்  ஆக்சிஜன் வசதிகளுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில்  3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி ெசலுத்துவதில் சென்னை  முதலிடத்தில் உள்ளது.

கொரோனா அதன் குணத்தை  மாற்றிக் கொள்ளவில்லை.  குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்  கொள்ள வேண்டும். டெல்டா பிளஸ் அடுத்த அலை வரும் என்று  கூறியுள்ள நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் பூரணலிங்கம் தலைமையில் டாக்டர்கள்,  டீன்கள், மருத்துவ வல்லூநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு  செய்வார்கள் என்றார்.


Tags : Corona Care Center for Children at the Vimpur Hospital ,Q. Stalin , Chennai: Egmore Government Children's Hospital has a special facility with 250 beds to cope with the third wave
× RELATED கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு