கட்சியில் தனது பலத்தை நிரூபிக்க தந்தை பிறந்தநாளில் சிராக் பாதயாத்திரை: ஜூலை 5ம் தேதி துவக்கம்

பாட்னா: கட்சியில் தனது பலத்தை காட்ட தந்தையின் பிறந்தநாளான வரும் 5ம் தேதி அவரது சொந்த தொகுதியான ஹாஜிபூரில் இருந்து சிராக் பஸ்வான் ‘ஆசிர்வாத பாதயாத்திரையை’ தொடங்குவதாக அறிவித்துள்ளார்.   பீகாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பஸ்வானின் மகனும் எம்பியுமான சிராக் பஸ்வான் கட்சியை வழிநடத்தி வந்த நிலையில், அவரது சித்தப்பா பசுபதி பராஸ் தலைமையில் 5 அதிருப்தி எம்பிக்கள் கோஷ்டி சேர்ந்தனர். நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை நீக்கி பசுபதி அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், அவர் லோக் ஜனசக்தி கட்சி தேசிய தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இதனால், தனித்து விடப்பட்டுள்ள சிராக் பஸ்வான் கட்சியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளார்.

இந்நிலையில், சிராக் பஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘எனது குடும்பத்தில் மகாபாரத போர் நடக்கிறது. எனது சித்தப்பா பசுபதி துரோகம் செய்து விட்டார். தேசிய காரிய கமிட்டி உறுப்பினர்கள் 90% பேர் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அவர்கள் வெறும் 9 பேர் தான். இதை நிரூபிக்க அடுத்த மாதம் 5ம் தேதி எனது தந்தையின் பிறந்தநாளான அன்று அவரது சொந்த தொகுதியான ஹாஜிபூரில் இருந்து ‘ஆசிர்வாத பாதயாத்திரையை’ தொடங்க உள்ளேன். இந்த யாத்திரை மாநிலம் முழுவதும் 2 மாதம் நடக்கும். இதில் கட்சியில் எனது பலத்தை நிரூபிப்பேன்,’’ என்றார்.

Related Stories:

>