×

தேர்தலுக்கு பிறகு பாஜவினர் மீது தாக்குதல் உங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி செய்வதை ஏற்க முடியாது: மம்தா அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நடந்து வரும் வன்முறைகள் குறித்து விசாரிக்க, தனி குழுவை அமைக்கும்படி தேசிய மனித உரிமை  ஆணையத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க  மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக  முதல்வராக மம்தா பானர்ஜி  பதவியேற்றார். முன்னதாக மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதன் பிறகு, மாநிலத்தின் பல்வேறு  இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள், பெண் நிர்வாகிகள் தாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், நேரில் விளக்கம் அளிக்கும்படியும் ஆளுநர்  ஜெக்தீப் தன்கார் உத்தரவிட்டார்.

மேலும், டெல்லி சென்ற அவர் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில்,  வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்கக்கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தல்  பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால்  தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘மேற்கு வங்கத்தில் எந்த இடத்திலும்  வன்முறையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார்  வழக்கு பதிவு செய்யவும் தவறி விட்டனர். மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்படும்  அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட
வேண்டும்.

நீதிமன்றத்தின்  உத்தரவு இருந்த போதிலும், எந்தவொரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. சட்டம்  ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பது அரசின்  கடமை. உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கு வங்கத்தை ஆட்சி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனிக்குழு அமைத்து வன்முறை  சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்,’ என்று இடைக்கால உத்தரவிட்டது.

மம்தா மேல்முறையீடு
மேற்கு வங்க அரசுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை, முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி, உயர் நீதிமன்றத்தில் மம்தா அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

Tags : BJP ,Mamata Banerjee , Attack on BJP after election is unacceptable to rule as you wish: Mamata Banerjee High Court Strict
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்