×

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி

மூனிக்: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி 2-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்தது. ஜெர்மனியின் மூனிக் நகர கால்பந்து அரங்கில் நடந்த எப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஜெர்மனி அணிகள் மோதின. போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 15வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். எனினும், போர்ச்சுகல் வீரர்கள் ரூபன் டயஸ் 35வது நிமிடத்திலும், குவரெய்ரோ 39வது நிமிடத்திலும் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் ‘சுய கோல்’ ஆக அமைந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இதனால், இடைவேளையின்போது ஜெர்மனி 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் துடிப்புடன் விளையாடிய ஜெர்மனி அணிக்கு ஹாவெர்ட்ஸ் (51வது நிமிடம்), கோசென்ஸ் (60’) கோல் அடித்து 4-2 என முன்னிலையை அதிகரித்தனர்.

பதில் கோல் அடிக்க போர்ச்சுகல் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 4-2 என வெற்றியை வசப்படுத்தி நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது. பிரான்ஸ் - ஹங்கேரி அணிகள் மோதிய மற்றொரு லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. எப் பிரிவில் பிரான்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளன. ஹங்கேரி (1) கடைசி இடத்தில் பின்தங்கி உள்ளது. இந்த பிரிவில் ஜெர்மனி - ஹங்கேரி, போர்ச்சுகல் - பிரான்ஸ் இடையே நாளை மறுநாள் நடக்க உள்ள கடைசி லீக் ஆட்டங்களின் முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. ஈ பிரிவில் ஸ்பெயின் - போலந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

Tags : Euro football championship ,Portugal Germany , Euro football championship defeat to defending champions Portugal Germany
× RELATED யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் நடப்பு...