×

அறிமுக டெஸ்டில் அசத்திய வீராங்கனைகள்: ஆட்ட நாயகி ஷபாலி

பிரிஸ்டல்: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில், அறிமுக வீராங்கனைகள் அமர்க்களமாக விளையாடி முத்திரை பதித்துள்ளனர். பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நடந்த பரபரப்பான இந்த போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், இந்தியா 231 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. 2வது இன்னிங்சில் 240 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறிய இந்தியா தோல்வியை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9வது விக்கெட்டுக்கு ஸ்நேஹ் ராணா - டானியா பாட்டியா இருவரும் மிகுந்த உறுதியுடன் போராடி போட்டியை டிராவில் முடிக்க உதவினர். இந்தியா 121 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 344 ரன் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது. ராணா 80 ரன், டானியா 44 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு சரியான விளம்பரமாக அமைந்த இப்போட்டியில், இந்திய அணியில் ஷபாலி, தீப்தி, பூஜா, ராணா, டானியா என 5 வீராங்கனைகளும், இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லியும் அறிமுகமாகினர். முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பாகப் பங்களித்த இவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பாராட்டையும் பெற்றுள்ளனர். முதல் இன்னிங்சில் 96 ரன், 2வது இன்னிங்சில் 63 ரன் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா (17 வயது) ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார். மிக இளம் வயதில் ஒரு டெஸ்டின் 2 இன்னிங்சிலும் 50+ ஸ்கோர் அடித்த சாதனையில் சச்சினுக்கு (17 வயது, 107 நாள்) அடுத்த இடத்தை பிடித்துள்ளார் (17 வயது, 139 நாள்). மேலும், 2 இன்னிங்சிலும் சேர்த்து 159 ரன் எடுத்து, டெஸ்டில் அறிமுக வீராங்கனைகள் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையில் ஷபாலி 3வது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மிஷெல் காஸ்கோ (204), லெஸ்லி குக் (189, இங்கி.) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

இங்கிலாந்தின் 4 விக்கெட்டை வீழ்த்தியதுடன் 2வது இன்னிங்சில் 80* ரன்  விளாசி ஆல் ரவுண்டராக ஜொலித்த ஸ்நேஹ் ராணா, அவருக்கு உறுதுணையாக நங்கூரம்  பாய்ச்சி நின்ற டானியா பாட்டியா, 29*, 54 ரன் மற்றும் 3 விக்கெட் வீழ்த்திய  தீப்தி, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பூஜா வஸ்த்ராகர் ஆகியோரும்  முத்திரை பதித்தனர்.இங்கிலாந்து தரப்பில் டங்க்லி ஆட்டமிழக்காமல் 74 ரன் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.



Tags : Shabali , India, England, Women's Cricket, Test Match
× RELATED அறிமுக வீராங்கனை ஷபாலி 2வது இன்னிங்சிலும் அபாரம்