×

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

சென்னை:  சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, காக்ஸ் காலனி, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தயாநிதி மாறன் எம்பி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.   

அப்போது, மனிதக்கழிவை மனிதனே அகற்றும் அவல நிலையினை மாற்ற முன்மாதிரியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு பகுதியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் பணியினை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மேலும், சிதிலமடைந்த நிலையில் கொய்யாத்தோப்பு பகுதியில் உள்ள 302 குடியிருப்புகளையும், காக்ஸ் காலனி பகுதியில் உள்ள 84 குடியிருப்புகளையும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் பகுதியில் உள்ள 256 குடியிருப்புகளையும் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள 136 குடியிருப்புகளையும்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.  

அப்போது, சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி மக்கள் பயன் பெறும் வகையில் வாகன நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன், ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, உறங்கும் அறை, சமையலறை தனித்தனியே குளியலறை மற்றும் கழிவறை, மின்தூக்கி, ஜெனரேட்டர் ஆகிய வசதிகளை உள்ளடக்கிய புதிய குடியிருப்புகளை கட்டித்தரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.  தெற்கு கூவம் ஆற்றுச்சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையினை பரிசீலித்து நிரந்தரமான மாற்றுக்குடியிருப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  ஆய்வின் போது வாரிய தலைமைப்பொறியாளர் ராம.சேதுபதி, கண்காணிப்பு பொறியாளர் அ.செல்வமணி, நிர்வாகப்பொறியாளர்  சுடலை முத்துகுமார் உள்ளிட்ட வாரிய பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Chepauk ,Minister ,Thamo Anparasan ,Tiruvallikeni , Chepauk - Minister Thamo Anparasan inspects cottage conversion board flats in Tiruvallikeni constituency
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...