×

நடிகை சாந்தினி அளித்த பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

சென்னை: நடிகை சாந்தினியுடன் ஒரே வீட்டில் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தியது, கட்டாய கருகலைப்பு செய்தது, நிர்வாண படம் அனுப்பி மிரட்டியது தொடர்பான  விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, சைபர் கிரைம் போலீசார்
உதவியுடன் தனிப்படை போலீசார்  நேற்று அதிகாலை பெங்களூருவில் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசியா குடியுரிமை பெற்றவர். மலேசியா சுற்றுலா வளர்ச்சிக் கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தபோது, அதிமுக அமைச்சரவையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு கிடைத்தது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக கணவன் -மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
 இதனால் நடிகை சாந்தினி 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவரது நண்பர் டாக்டர் அருண் என்பவர் மூலம் நடிகையை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். மேலும் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பல முறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். அதன் பிறகு சாந்தினியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சந்தினி திருமணம் குறித்து, அமைச்சர் மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒழுங்காக மலேசியாவிற்கே சென்று விடு.. இல்லையேல் ஒன்றாக இருக்கும் போது எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு இல்லாமல் மணிகண்டன் டெலிகிராம் மூலம் நடிகை குளியல் அறையில் நிர்வாணமாக குளித்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த நடிகை சாந்தினி சம்பவம் குறித்து உரிய ஆவணங்களுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது கடந்த மே 28ம் தேதி பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி ஏமாற்றியது தெரியவந்தது. அதைதொடர்ந்து அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313, 323, 376, 417, 506(i) மற்றும் 67(ஏ) ஐடி ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த மணிகண்டன் போலீசார் கைதில் இருந்து தலைமறைவானார். மேலும், நடிகை பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 9ம் தேதி வரை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தடைவிதித்து விசாரணையை தள்ளிவைத்தது.

பிறகு மீண்டும் கடந்த 16ம் தேதி மணிகண்டன் மீதான ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பாலியல் வழக்கு என்பதால் முன் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மணிகண்டன் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மணிகண்டன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மணிகண்டன் போலீசாரிடம் சிக்காமல் மீண்டும் தலைமறைவாகிவிட்டார். அதைதொடர்ந்து அடையார் துணை கமிஷனர் மேற்பார்வையில் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 2 தனிப்படையினரும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மணிகண்டனை தேடிவந்தனர்.

இதற்கிடையே, நண்பர்கள் உதவியுடன் அவர் பெங்களூரு தப்பி சென்றதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னலை தீவிரமாக கண்காணித்து, மணிகண்டனை தனிப்படையினர் நெருங்கினர்.  அப்போது, பெங்களூரு எலட்க்ரானிக் சிட்டி அடுத்த கெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மணிகண்டன் பதுங்கி இருந்தது உறுதியானது. இதையடுத்து, நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் மணிகண்டனை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பிறகு மணிகண்டனை தனிப்படையினர் சாலை மார்க்கமாக நேற்று மதியம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மணிகண்டனை தனிப்படையினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து  அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வைத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது, நடிகை சாந்தினியுடன் ஒரு வீட்டில் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தியது உண்மையா? நடிகையை கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்தது ஏன்? திருமணம் செய்வதாக கூறி நடிகையை ஏமாற்றியது ஏன்? பல முறை நடிகையை அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி உடலுறவு செய்தது உண்மையா உள்ளிட்ட கேள்விகள் கேட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்றும், ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவியதாக அவரது உதவியாளர்களான பிரியன் மற்றும் இளங்கோவன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 2 மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று மாலை மணிகண்டனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் உள்ள 17வது நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் மணிகண்டனை ஜூலை 2ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நடிகை ஒருவர் அளித்த பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரை ஒருவர் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு
நடிகை சாந்தினி தனது விருப்பத்திற்கு மாறாக பல முறை கட்டாயப்படுத்தியும், மாதவிடாய் காலத்திலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிருகத்தனமாக உடலுறவு செய்ததாக புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் மணிகண்டனுக்கு ஆண்மை பரிசோதனை செய்யவும், அதேபோல், நடிகை சாந்தினிக்கும் கன்னித்தன்மை பரிசோதனையும் செய்ய முடிவு செய்துள்ளனர்.



Tags : AIADMK ,minister ,Manikandan ,Bangalore ,Chandini , Former AIADMK minister Manikandan arrested in Bangalore in connection with actress Chandini's sex case
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...