×

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்

சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தமிழக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வராக பதவியேற்றுக் கொண்டதும் தலைமை செயலகம் வந்த மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கான 5 முக்கிய திட்டங்கள் குறித்து அறிவித்தார். அதன்படி, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ₹4 ஆயிரம், பெண்களுக்கு அரசு மாநகர பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு உள்ளிட்ட 5 அறிவிப்புகளை வெளியிட்டார். இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக மே 11ம் தேதியும், சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதற்காக மே 12ம் தேதியும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக புதிய அரசு பதவியேற்றதும், கவர்னர் உரை, அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டம், மானிய கோரிக்கை நிறைவேற்றுதல் உள்ளிட்டவைகளுக்காக சட்டப்பேரவை கூடுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்ததால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வரும் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசித்தார். அதன்படி வருகிற 21ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட உள்ளதால், அன்றைய தினம் கவர்னர் உரையாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை தமிழக கவர்னரும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3வது தளத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு நேற்று முன்தினம் காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து  பேசினார்.

சபாநாயகராக பதவியேற்ற பின் முதல்முறையாக அப்பாவு, தமிழக கவர்னரை சந்தித்தார். அவருக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.  இதைதொடர்ந்து, நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது  குறித்தும், அன்றைய தினம் தாங்கள் (ஆளுநர்) உரையாற்ற வேண்டும் என்றும்  சபாநாயகர் அழைப்பு விடுத்தார். சபாநாயகரின் அழைப்பை தமிழக ஆளுநர் ஏற்றுக்  கொண்டார்.  இதையடுத்து, சட்டப்பேரவை தொடருக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு  தயார் நிலையில் உள்ளது. இந்த முறை அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்தான் அவரவர் அமர வேண்டும். முன்னதாக, கொரோனா  தொற்று பரவலை தடுக்க, சட்டப்பேரவை  கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து  உறுப்பினர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள்,  பத்திரிகையாளர்களுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை நடந்தது.

இதில், நெகட்டிவ்  என சான்றிதழ்  இருந்தால் மட்டுமே பேரவை கூட்டத்தில் பங்கேற்க  அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூடுகிறது. கூட்டத்தொடருக்கு வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேரவைக்குள் அழைத்து வந்து இருக்கையில் அமர வைப்பார்கள். இதையடுத்து, திருக்குறள் வாசித்து கவர்னரை பேச சபாநாயகர் அழைப்பு விடுப்பார். இதையடுத்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார். ஆளுநர் உரையில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் கடந்த 40 நாட்களில் திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் இடம்பெறும். அவர் உரை நிகழ்த்திய பின்பு, சபாநாயகர் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம்  நடத்தப்படும்.

அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது  குறித்து முடிவு செய்யப்படும். அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில், பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சபாநாயகர் நாளை அறிவிப்பார். இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.  ஆளுநர் உரைக்கு நன்றி  தெரிவித்து கடைசி நாள் முதல்வர் பதில் உரை ஆற்றுவார். இந்த 3 நாட்கள் கூட்டம் முடிந்ததும், சில நாட்கள் இடைவெளிக்கு பின் 2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக மீண்டும் கூட்டம் கூடும். அப்போது, நிதிநிலை குறித்து தமிழக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நீட் உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து அரசு தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 40 நாட்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதனால், இந்த கூட்டத்தொடரில் மேலும் பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என கூறப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இது என்பதால் தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tamil Nadu Legislative Assembly ,MK Stalin ,Chief Minister ,Purohit ,Governor ,Banwarilal , Tamil Nadu Legislative Assembly convenes tomorrow after MK Stalin takes over as Chief Minister: Governor Banwarilal Purohit
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...