ஓட்டல் அறையில் பாலியல் அத்துமீறல்: விவாகரத்தான பெண்ணை ஏமாற்றியதாக சென்னை ஆசாமி மீது வழக்கு

கோவை: விவாகரத்தான பெண்ணை ஓட்டல் அறைக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றியதாக சென்னையை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரை சேர்ந்த 48 வயது பெண். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை பிறந்த நிலையில் முதல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். பின்னர் ராஜேஷ் சிங் என்பவரை 2வதாக திருமணம் செய்து துபாயில் செட்டிலானார். அங்கு அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஷ்சிங்கை பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் அந்த பெண் கோவையில் தனியாக வசித்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.

அதில் சென்னை கிழக்கு முகப்பேரை சேர்ந்த ஆனந்த் சர்மா(49) என்பவருடன் தொழில் ரீதியாக கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்த் சர்மா தானும் திருமணமாகி விவாகரத்தாகி மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆனந்த் சர்மா அந்த பெண்ணுடன் தொழில் சம்பந்தமாக தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். கோவை வந்த அவரை அந்த பெண் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்துள்ளார். அப்போது ஆனந்த் சர்மா நீயும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறாய், நானும் விவாகரத்தானவன் எனவே இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என பாசமாக பேசியுள்ளார்.

அப்போது அந்த பெண்ணை கட்டாயபடுத்தி ஆனந்த் சர்மா பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.  இதற்கிடையே ஆனந்த்சர்மா மனைவியை விவாகரத்து செய்யாமல் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருவது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் இச்சைக்கு அவர் பயன்படுத்தியதை அந்த பெண் அறிந்தார். இது குறித்து ஆனந்த்சர்மாவிடம் கேட்டபோது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் ஆனந்த்சர்மா(49) மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விவாகரத்தான பெண்களை குறிவைத்து,  பலரை ஆனந்த சர்மா ஏமாற்றியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>