×

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு அண்ணாமலை பல்கலைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்தி வருவதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில், இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை. இந்தியா முழுவதும் 1600 சட்ட கல்லூரிகள் இயங்குகின்றன என்று கூறப்பட்டிருந்தது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இந்த கல்லூரிகளில் போதுமான தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு வழங்கப்படுகிறா என்பதை இந்திய பார் கவுன்சில் தீவிரமாக கண்காணிப்பது அவசியம். இந்த மனுவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

Tags : University of Annamalai , Extension of ban imposed on law school Annamalai University through distance education: High Court order
× RELATED தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு...