பொது நோக்கங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் கோயில் நிலங்களை குத்தகை விற்பனை செய்ய கட்டுப்பாடு: மாவட்ட வருவாய் அலுவலர் சான்று கட்டாயம்; அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: பொது நோக்கங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் கோயில் நிலங்களை குத்தகைக்கு விடவோ, விற்பனை செய்யவோ செயல் அலுவலர்கள் பரிந்துரை செய்யும் போது, மாவட்ட வருவாய் அலுவலர்கள் சான்று பெறுவது கட்டாயம்  என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலஙகள் உள்ளது. இதில், 1.78  லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற நிலங்கள் காலியாக உள்ளது. இதில், மாநகர், நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எந்த வித பயன்பாட்டிற்கும் இல்லாமல் அப்படியே போடப்பட்டுள்ளது.

இந்த நிலங்களை அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன் படி பொது நோக்கங்களுக்காக குத்தகை அல்லது விற்பனை செய்யலாம் என்று உள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையம், குடிநீர் தொட்டிகள், குடிநீர் பம்பிங் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு துறைகளின் கட்டிடங்களுக்கும், சாலை அமைக்கவோ, டிரான்ஸ்பார்மர், உயர்மின் அழுத்த கோபுரத்துக்கு தரலாம் என்று அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது. இதன் மூலம், கோயிலுக்கு வருமானம் வருகிறதா என்று பார்த்து, அந்த நிலங்களை குத்தகை, விற்பனை செய்வதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலங்களின் சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பில் எது அதிகம் என பார்த்து அதற்கேற்ப நிலங்களின் மதிப்பை நிர்ணயம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், சில நேரங்களில் மாவட்ட நிர்வாகம்  நிர்ணயிக்கும் மதிப்பை ஏற்றுக்கொண்டு நிலத்தை ஒப்படைக்கின்றனர். அந்த நிலத்தின் மதிப்பு சரியானதா என்பதை கூட பார்க்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்தனர். இதனால், அறநிலையத்துறைக்கு இழப்பு ஏற்படுவதாக கூறி பல நேரங்களில் சட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நிலங்களை மதிப்பை நிர்ணயம் செய்த மாவட்ட வருவாய் அலுவலர்களின் சான்று பெற்று, அதன்பிறகே நிலங்களை குத்ததைக்கோ, விற்பனை செய்வது தொடர்பாக ஆணையருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன்படி பொது நோக்கங்களுக்காக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அசையா சொத்துக்களை குத்தகைக்கோ, விற்பனை செய்யலாம். அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. சொத்து குத்தகைக்கு, விற்பனை தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும். இணை ஆணையரின் பரிந்துரைப்படி அறங்காவலர்கள் குழுவினர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நிலங்களின் மதிப்பை  மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்து, அது தொடர்பாக அவர்களிடம் சான்று பெற வேண்டும். அதன்பிறகே இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சொத்து குத்தகை, விற்பனை

தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும்.

Related Stories:

>