×

துறைமுகம் கல்யாணபுரம் பகுதியில் ரூ.54.25 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர்கள், எம்பி ஆய்வு

சென்னை: துறைமுகம் கல்யாணபுரம் பகுதியில் ரூ.54.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தயாநிதி மாறன் எம்பி, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் பகுதியில் உள்ள 254 சிதிலமடைந்த பழைய குடியிருப்புகளை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தில், ரூ.54.25 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.ஆர்.என்.கார்டன் பகுதியில் 96 குடியிருப்புகள், காமராஜர் காலனி பகுதியில் 16 குடியிருப்புகள் மற்றும் துறைமுகம் பகுதியில் 234 குடியிருப்புகளில் ரூ.10.96 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள், எல்லீஸ்புரம் பகுதியில் மறுகட்டுமானம் செய்யவுள்ள சிதிலமடைந்த 39 குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  

அப்போது ஊரக தொழில் துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞரால் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற உன்னத நோக்கத்துடன், தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக 1970ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். ஏற்கனவே, அதில் வசித்து வந்த குடியிருப்புதாரர்களுக்கு முதல்வரின் ஆணையினைப் பெற்று, வீடுகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடியிருப்புகள் கட்டும் பணியினை நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. ஆனால் ஆவணங்களை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் உள்ள கடத்தப்பட்ட சிலைகளை உடனடியாக மீட்க திறமையான அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் திங்கட்கிழமை இதுபற்றி ஆலோசனை நடத்த உள்ளோம்,’ என்றார். ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ஹிதேஸ் குமார் எஸ் மக்வானா, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண் இயக்குநர் கோவிந்த ராவ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

* பயனாளி அல்லாதோர் வசித்தால் நடவடிக்கை
அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில்,  ‘குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் பயனாளிகள் அல்லாதோர் வசிப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அப்புறப்படுத்தி, புதிய வீடுகளை கட்ட முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார். குடிசை மாற்று வாரியத்தில் வீடுகளை அதிகப்படுத்தி ஏற்கனவே உள்ள அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Tags : Port Kalyanapuram , 54.25 crore flats in Port Kalyanapuram area: Ministers, MP study
× RELATED துறைமுகம் கல்யாணபுரம் பகுதியில் ரூ.54.25...