×

அமெரிக்காவுக்கு சென்றார் ரஜினி ஒரு மாதம் தங்கி இருக்க முடிவு

மீனம்பாக்கம்: நடிகர் ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று நேற்று அதிகாலை சென்னையில் இருந்து கத்தார் ஏர்லைனன்ஸ் விமானத்தில் தோகா வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நடிகர் ரஜினி சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவர், அவ்வப்போது அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்வார். உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்ததால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை கடந்தாண்டு மார்ச் 23ம் தேதியில் இருந்து மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் ரஜினி அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக குறைந்து வருவதால், மருத்துவ காரணங்களை எடுத்துக்கூறி, வெளிநாடு செல்ல சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் ரஜினி கோரினார். மத்திய அரசும் சிறப்பு அனுமதி வழங்கியது.இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கத்தார் வழியாக அமெரிக்காவுக்கு ரஜினி புறப்பட்டு சென்றார். ரஜினியை அவரது மனைவி லதா, காரில் அழைத்து வந்து விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். இதற்கிடையில், ஊடகத்தினர் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்கள், ரஜினியிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். ஆனால் அவர் எதுவும் பேசாமல் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். அமெரிக்காவில் ரஜினி, மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு ஒரு மாதம்  அங்கேயே தங்கி ஓய்வு எடுத்து விட்டு, ஜூலையில் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Tags : Rajini ,US , Rajini went to the US and decided to stay for a month
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...