×

புதுச்சேரி மாநில பாஜக அலுவலகம் சூறை!: ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்காததற்கு கடும் எதிர்ப்பு..பதாதைகளை கிழித்தெறிந்து ஆதரவாளர்கள் ஆவேசம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில்  ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு சூறையாடியதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டாலும் அமைச்சர்கள் இன்னமும் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. 


அமைச்சர் பதவிகளை பிரித்துக்கொள்வதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாரதிய ஜனதா இடையே நிலவி வரும் பிரச்சனையே இதற்கு காரணம். 2 அமைச்சர்களை கேட்டுப்பெற்ற பாஜக, அவற்றை யாருக்கு தருவது என தீர்மானிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவி தருவதாக உறுதி அளித்திருந்த பாஜக திடீரென பெயர் பட்டியலை மாற்றிவிட்டதாக காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் கூறியுள்ளார். 


பாஜக மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக அவர் டெல்லியில் முகாம் இட்டுள்ளார். ஜான்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சிலர் அலுவலகத்தில் இருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். 


அலுவலக நுழைவு வாயிலையும் அடித்து நொறுக்கினர். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாக கூறி அவர்கள் ஆவேச குரல் எழுப்பினர். ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி அளிக்கக்கோரி பாஜக மாநில தலைவர் சுவாமிநாதனை சந்தித்து அவரது ஆதரவாளர்கள் மனு கொடுத்தனர். 


அதன் பிறகு பேசிய சுவாமிநாதன், அமைச்சர் பதவி குறித்து கட்சி மேலிடமே முடிவு செய்யும் என்றார். ஜானுடைய தூண்டுதலின் பேரில் தான் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இருப்பதாக அவர் கூறினார். புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் ஜான்குமார். 


சட்டப்பேரவை தேர்தலுக்கு சில வாரங்களே இருந்த போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாமல் இருந்தது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாஜக-வை சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய்சரணுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே பதவி கிடைக்காத ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அமைச்சர் பதவி விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே குழப்பம் அதிரித்துள்ளது. 



Tags : Pondicherry ,BJP ,Jankumar , Puducherry, BJP Office, Jankumar, Ministerial post, Opposition
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...