ஈரானின் புதிய அதிபராக உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் ரைசி தேர்வானார் : 1988ல் ஆயிரக்கணக்கானோருக்கு தூக்கு தண்டனை விதித்தவர்!!

தெஹ்ரான் : ஈரான் நாட்டின் புதிய அதிபராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி தேர்வாகிறார். ஈரானின் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதிபர் பதவிக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் மைய வங்கியின் முன்னாள் தலைவர் அப்துல் உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. ஈரானில் 5. 9 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ள போதும் 50% குறைவான வாக்குகளே பதிவாகின. அமெரிக்காவின் அணுஆயுத பரவல் தடை உத்தரவால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

விலைவாசி உயர்வு, பேச்சுரிமைக்கு எதிரான அடக்குமுறை, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு சரிந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  இப்ராஹிம் ரைசி முன்னிலை வகித்து வருகிறார்.தேர்தலில் ரைசி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஈரான் முன்னாள் அதிபர் அசன் ரூஹானி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் ரைசி, அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். ஈரான் மதத் தலைவர் ஆதரவாளராக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். ஈரான் அதிபர் பதவியை நெருங்கி உள்ள இப்ராஹிம் ரைசி, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர்.1988ம் ஆண்டு ஈரான் அரசுக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியின் போது, கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியவர் இப்ராஹிம் ரைசி. இதனால் இப்ராஹிம் ரைசியை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: