×

ஒன்றரை ஆண்டுகளாக ஆள் அரவமற்று கிடக்கிறது மேலப்பாளையம் ரயில் நிலையத்தை மூடும் அபாயம்

நெல்லை : நெல்லை அருகே மேலப்பாளையம் ரயில் நிலையம் ஒன்றரை ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் நிலையில், அந்த ரயில் நிலையத்தை மூடும் அபாயம் உள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள புதிய கட்டிடங்களை தேவைக்கேற்ப பயன்படுத்த ரயில்வே முன்வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லை - நாகர்கோவில் இடையே 74 கிமீ ரயில்பாதை கடந்த 1981ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் தாமிரபரணி ஆற்றை கடந்தவுடன், அனைத்து ரயில் நிலையங்களும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு கீழ் சென்றுவிடும். நெல்லையை அடுத்துள்ள மேலப்பாளையம், செங்குளம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை திருவனந்தபுரம் கோட்டமே மேற்கொண்டு வருகிறது.

இதில் மேலப்பாளையம், செங்குளம், பணகுடி ஆகிய ரயில் நிலையங்கள் மிக சிறியவையாகும். நெல்லை ரயில் நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கணக்கில் கொண்டு மேலப்பாளையத்தில் கிராசிங் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுகாலமாக இருந்தது. தெற்கு ரயில்வேயும் அந்தக் கோரிக்கையை ஏற்று கடந்த 2012-13ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் மேலப்பாளையத்தை கிராசிங் ரயில் நிலையமாக அறிவித்தது. அதற்காக ரூ.7.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கேற்ப 2014ம் ஆண்டுக்கு பின்னர் மேலப்பாளையம் ரயில் நிலையத்தின் தோற்றம் மாறத் தொடங்கியது. முதற்கட்டமாக ரூ.25 லட்சம், இரண்டாம் கட்டமாக ரூ.1.20 கோடி என ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்ய, நடைமேடைகள் பொலிவு பெற்றன. பயணிகள் வசதிக்காக முன்பதிவு மையம், அதிகாரிகளுக்காக புதிய கட்டிடங்கள், கிராசிங் நிலையம் என பல்வேறு கட்டிடங்கள் உருப்பெற்றன. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் இரட்டை ரயில்பாதையை காரணம் காட்டி, மேலப்பாளையம் கிராசிங் ஸ்டேஷன் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட்டது.

இதனால் நடைமேடை பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் மேலப்பாளையம் ரயில் நிலையம் கேட்பாரற்று கிடந்தது. அதிலும் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட ரயில் நிலையம், அதன் பின்னர் திறக்கப்படவே இல்லை. அங்கு புதிதாக கட்டப்பட்ட முன்பதிவு மையம், கிராசிங் நிலையம் ஆகியவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறின. இரவு நேரங்களில் மினி பார் என அழைக்கப்படும் அளவுக்கு அந்த ரயில் நிலையம் உருமாறிப் போனது. புதிய கட்டிடங்களின் கண்ணாடி அறைகள், படிகள் ஆகியவை தகர்க்கப்பட்டன.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மேலப்பாளையம் ரயில் நிலையம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. ரயில்வே ஊழியர்கள் யாரும் பணிக்கு வருவதில்லை. பகல் பொழுதில் ஆதரவற்றவர்களும், இரவு நேரங்களில் மதுபான பிரியர்களும் மட்டுமே அங்கு வந்து செல்கின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக கட்டிடங்களை தேடி அலையும் நிலை காணப்பட்டது. மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள புதிய கட்டிடங்களை அதற்கு கூட பயன்படுத்தி இருக்கலாம். புதிய கட்டிடங்கள் பாழாவது ஒருபுறம், பழைய குடியிருப்புகளும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. மேலப்பாளையம் ரயில் நிலையத்தை புனரமைக்க திருவனந்தபுரம் கோட்டம் மனது வைக்க வேண்டும்’’ என்றனர்.

பாழாகும் புதிய கட்டிடங்கள் பராமரிக்கப்படுமா? மீண்டும் திறக்கப்படுமா?

மேலப்பாளையம் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுவதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை. அந்த ரயில் நிலையத்தை மையமாக கொண்டு இரு ரயில்கள் மட்டுமே இயங்கின. நாகர்கோவில்- கோவை பாசஞ்சர் ரயில் முன்பு அங்கு நின்று சென்றது. தற்போது அந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுவிட்டது. மற்றொரு ரயிலான நெல்லை- நாகர்கோவில் பாசஞ்சர் ரயிலுக்கு அங்கு நிறுத்தம் உண்டு. பாசஞ்சர் ரயில்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படவே இல்லை. இனி இயக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டால் மட்டுமே மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மீண்டும் பயணிகளை பார்க்க முடியும்.

Tags : Nellai, Melapalayam,Railway Station
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...