×

மன்னார்குடி அருகே காவிரி நீரால் நிரம்பும் 316 ஏக்கர் வடுவூர் ஏரி

*பாசன வசதி பெறும் 1400 ஏக்கர் நிலம் : விவசாயிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி : மன்னார்குடி அருகில் உள்ள வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடுவூர் ஏரி காவிரி நீரால் நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12ம் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து காவிரி நீர் கல்லணைக்கு 16ம் தேதி அதிகாலை வந்தடைந்தது.

இதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம், தென் பெரம்பூரில் வெண்ணாற்றில் இருந்து பிரியும் வடவாறு மூலமாக வரும் தண்ணீர் தஞ்சை, பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் மதுக்கூர் உள்ளிட்ட 6 தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.

அதனடிப்படையில் வடவாற்றில் திறக்கப்பட தண்ணீரானது சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் வடவாறு மற்றும் அதில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் பெருமளவு தூர்வாரப்பட்டதன் விளைவாக தென் பெரம்பூரில் வடவாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தங்கு தடையின்றி விரைவாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீருக்கு ஆதாரமாகவும் வடுவூர் ஏரி திகழ்கிறது. வனம் மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வடுவூர் ஏரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பல வருடங்களுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இதன் காரணமாக கூடுதலாக தண்ணீர் தேக்க முடியும். 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடுவூர் ஏரி மூலம் நேரடியாக 1,400 ஏக்கர் நிலமும், மறைமுகமாக சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசன வசதியை பெறுகிறது. காவிரி நீரால் வடுவூர் ஏரி நிரம்புவது விவசாயிகளான எங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து வடவாற்றில் உள்ள பல்வேறு பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.

Tags : Kaviri ,Mannarukudi ,Vadur Lake , Mannargudi, vaduvur,Cauvery water, farmers happy
× RELATED பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற...