×

குறையும் கொரோனா தொற்று!:ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு வழங்குவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 2020- 21 ஆகிய அதிகப்படியாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை கொரோனா. அந்த வார்த்தையில் ஊரடங்கு என்பதும் பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்லலாம். அதன்படி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பது நாளை மறுநாளுடன் முடிவடைய இருக்கிறது. 


இதனை தொடர்ந்து  மேலும் சில தளர்வுகளை அறிவிக்க தமிழக அரசு தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.  ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி புதிய அரசு திமுக தலைமையில் பதவியேற்ற போது கொரோனா அதிகளவில் பரவி இருந்தது. 


கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தை கடந்திருந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாததால் முழு ஊரடங்கை அமல்படுத்தும்படி முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 


அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு பொதுமக்கள் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகளுடன் 21ம் தேதி வரை 4வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் தற்போது இருந்து வருகிறது. 


21ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். 


தொடர்ந்து தமிழ்நாட்டின் தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்த நிலையில் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின் முடிவில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. 



Tags : Chief Minister ,MK Stalin , Corona, Curfew Extension, Medical Specialist, MK Stalin, Consulting
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...