×

கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த பறிமுதல் வாகனங்கள்

*சதி வேலையா என போலீசார் விசாரணை

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த பறிமுதல் வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி  காவல் நிலைய வளாகத்திலேயே அனைத்து மகளிர் காவல் நிலையம்,  போக்குவரத்து காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.   கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்களை  போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி உள்ளனர். தற்போது தினமும் 10 வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு  வருகின்றன.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வேறு  வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆட்டோ, ஒரு பைக் ஆகியன திடீரென  தீப்பிடித்து எரிந்தன. இதை கண்ட மகளிர் காவல் நிலைய பெண் காவலர் உஷா  அதிர்ச்சியடைந்தார். உடனே தண்ணீர் உற்றி தீயை அணைக்க முயன்றனர்.  இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து டிஎஸ்பி பாஸ்கரன்,  இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே  அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போலீசார் தண்ணீர்  ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் வாகனங்கள் முழுமையாக தீயில் எரிந்து  சேதமாகி, எலும்பு கூடாக காட்சியளித்தது. விசாரணையில் கன்னியாகுமரி  பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சுற்றி திரிகின்றனர்.  அவர்கள் காவல் நிலைய வளாகத்திற்குள் தூங்குவது வழக்கமாம்.  இதில் சிலர் குப்பைகளை கூட்டி தீ வைப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில்  தான் வாகனங்களில் தீப்பிடித்து இருக்கும் என்று போலீசார்  சந்தேகிக்கின்றனர்.

இது தவிர சமூக விரோத கும்பலின் நாச வேலையா?  என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. தற்போது  காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து  வருகின்றனர். இதேபோல் எரிந்த பைக், ஆட்டோக்கள் எந்த வழக்கில் பறிமுதல்  செய்யப்பட்டன என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். காவல் நிலைய வளாகத்தில்  நள்ளிரவு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kanyakumari , Kanniyakumari,Seizure vehicles, Fire accident
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...