குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் மயமாக்க கடும் எதிர்ப்பு

*தொடர் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு

குன்னூர் :  குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை, கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள  இந்த தொழிற்சாலையில் வெடிமருந்துகள் தயாரித்து ராணுவம் உட்பட முப்படைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை உட்பட நாட்டில் உள்ள 41 தொழிற்சாலைகளை 7  பிரிவுகளாக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை கண்டித்து 3 தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சிப்எல்யு பொதுச் செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், என்இயு  பொது செயலாளர் திலீப்குமார், டிஎப்எல்யு பொது செயலாளர் வெங்கடேஷ் ராவ்  ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசின் முடிவை கண்டித்து முதற்கட்டமாக கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More