போயிங் 737 ஜெட்லைனரின் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் 10 விமானம் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை!: ஒரே நேரத்தில் 230 பேர் பயணிக்கலாம்..!!

வாஷிங்டன்: பறக்கும் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் போயிங் 737 ஜெட்லைனர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட மாடல் அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் 9 வகை விமானங்களை உலகில் உள்ள பல்வேறு விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. இந்த வகை விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலமுறை விபத்தில் சிக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. 

2018 மற்றும் 2019ம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 346 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போயிங் 737 விமானங்களை பயன்படுத்த உலக அளவில் பல நிறுவனங்கள் தடை விதித்திருந்தன. இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான போயிங் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் 10 ஜெட்லைனர் வகை பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ சோதனை நேற்று வாஷிங்டனில் உள்ள ரெண்டன் விமானதளத்தில் நடைபெற்றது. 

சுமார் 2 மணி நேரம் வானத்தில் பறந்த மேக்ஸ் 10 ஜெட்லைனர் விமானத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இருப்பதாக போயிங் தெரிவித்துள்ளது. இந்த மேக்ஸ் 10 வகை  விமானத்தில் ஒரே நேரத்தில் 230 பேர் பயணிக்க முடியும். விமானத்தின் இயக்கம், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு என அனைத்தும் கணினி மென்பொருள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

போயிங் 737 ஜெட்லைனர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் 10 மாடலின் செயல்பாடுகள் திருப்தி அளித்துள்ள நிலையில், அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை இதற்கு விரைவில் அனுமதி வழங்கவிருக்கிறது. ஏர்பஸ் A321 விமானங்களுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் 737 மேக்ஸ் 10 விமானங்கள் 2023ம் ஆண்டு முதல் வான்வெளியை ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: