ரயிலில் தமிழர் அன்பாக தந்த பரிசு 2 மாமரம், 7 மாம்பழங்களுக்கு 4 காவலர், 6 நாய் பாதுகாப்பு: கிலோ விலை 2.70 லட்சம் என்றால் சும்மாவா...

போபால்:  மத்தியப் பிரதேசத்தில்  2 மாமரங்களில் காய்த்துள்ள விலை உயர்ந்த 7 பழங்களை திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு  4  காவலர்கள், 6 நாய்கள் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.  மத்தியப் பிரதேசம் மாநிலம்,  ஜபால்பூரை சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவர் தன்னுடைய தோட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 2 மாமரக் கன்றுகளை நட்டார். பின்னர்தான், அதில் காயத்த மாங்காய்கள் வித்தியாசமான நிறத்தில் முழுமையாக ரூபி வண்ணத்தில் இருந்தன. அதன் பிறகுதான் அவை ஜப்பானின் ‘மியாசாகி’ வகையை சேர்ந்த அரியவகை மாம்பழங்கள் என்பது  தெரிய வந்தது. இந்த மாம்பழங்கள் உலகின் மிக விலை உயர்ந்தவை. இவை சர்வதேச சந்தையில் கடந்தாண்டு ஒரு கிலோ  ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனையானது.

கடந்தாண்டு தோட்டத்தில் காய்த்த  மாம்பழங்களை சில திருடர்கள் தோட்டத்தில் புகுந்து  திருடி சென்றனர்.  பின்னர், இந்த மாம்பழத்தின் கொட்டைகளை பதப்படுத்தி, தங்கள் தோட்டங்களில் வளர்க்கத் தொடங்கி இருப்பதாகவும்  கூறப்படுகிறது. இதையடுத்து, தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களையும், காய்களையும் பாதுகாக்க சங்கல்ப் முடிவு செய்தார். தற்போது, இரண்டு  மரங்களிலும் 7 மாங்காய்கள் காய்த்துள்ளன. எனவே, இதனை பாதுகாப்பதற்காக 4 காவலர்கள், 6 நாய்களை  பாதுகாப்பு பணியில் அமர்த்தியுள்ளார்.  இந்த மரங்கள் கிடைத்தது பற்றி சங்கல்ப் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகளை வாங்குவதற்காக சென்னைக்கு சென்றபோது ரயிலில் ஒருவர் இந்த  மரக்கன்றுகளை கொடுத்தார். இதை உனது குழந்தைகளை போல் வளர்க்க வேண்டும்  என்று சொன்னார்.

ஆனால், அவை அரியவகை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. இது காய்க்க தொடங்கிய பிறகுதான், அதன் மகிமை தெரிந்தது. இது அரியவகையாக இருந்ததால், இந்த மாம்பழத்துக்கு எனது தாயான டாமினியின் பெயரை சூட்டினேன். பின்னர்தான் அது மியாசாகி பழங்கள் என்பது  தெரிந்தது,’’ என்றார்.

இந்த மாம்பழம் 300 கிராம் வரை உள்ளது. மும்பை நகை வியாபாரி ஒருவர், இதை கிலோ ரூ.21 ஆயிரத்துக்கு வாங்க முன்வந்துள்ளார். ஆனால், இந்த பழங்களை விற்காமல் பாதுகாத்து, அதை மரமாக வளர்க்க திட்டமிட்டு இருப்பதாக சங்கல்ப் தெரிவித்தார்.

* மியாசாகி மாம்பழத்தில் உடலில் உள்ள மாசுக்களை தூய்மைப்படுத்தும் ஆன்டிஆக்சிடன்டுக்கள் அதிகமாக இருக்கின்றன.

* பீட்டா கரோட்டின், போலிக் அமிலமும் நிறைந்து காணப்படுகின்றன. இவை, கண்பார்வைக்கு மிகவும் நன்மை  பயக்கும்.

* ஜப்பானின் மியாசாகி நகரம்தான் இந்த மரத்தின் பூர்வீகம். அதனால்தான், இது மியாசாகி பெயரில் அழைக்கப்படுகிறது.

Related Stories: