3வது அலையை எதிர்கொள்ள தயார்நிலை ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களை புதிதாக உருவாக்க சிறப்பு பயிற்சி திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: கொரோனா 3வது அலை தாக்கும் அபாயத்தை எதிர்கொள்வதற்காக, முன்களப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான குறுகிய கால சிறப்பு பயிற்சியை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் 3வது அலை, இதை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். ‘பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா 3.0’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.276 கோடி செலவில்  இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படும்.  இதில் வீட்டு சிகிச்சையில் உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, நவீன சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி உள்ளிட்டவை குறித்து தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படும். 2 அல்லது 3 மாதங்களில் இந்த பயிற்சி நிறைவடையும்.  இத்திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசுகையில், “கொரோனா இன்னும் போகவில்லை. நம்முடன் தான் இன்னமும் இருக்கிறது. வைரஸ் உருமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக நாடு தயாராக இருக்க வேண்டும். அதற்காக, மத்திய  அரசு மும்முரமாக  பணியாற்றி வருகின்றது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய திறமையான முன்களப் பணியாளர்களை  உருவாக்குவதே இந்த பயிற்சியின் நோக்கம்.  மாநிலங்களின் தேவைக்கேற்ப நாட்டின் உயர்மட்ட நிபுணர்கள் இதற்கான பாடத் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர்,” என்றார்.

Related Stories:

>