சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டம் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு அரசு 2.4 கோடி ஒதுக்கீடு: ஆகஸ்ட்டில் பணியை தொடங்க முடிவு

சென்னை: சென்னை கொரட்டூர் ஏரி சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் தண்ணீர் கடந்த 1950க்கு முன்பு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் பட்டரவாக்கம், அம்பத்தூர், ஆத்திப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட கழிவு நீர் ஏரி கலந்ததால், தண்ணீர் மாசடைந்தது. இதனால், அந்த ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஏரியில் குப்பை கொட்ட தொடங்கியதால் கொரட்டூர் ஏரி குப்பை மேடாக காட்சியளித்தது. இந்த நிலையில் கடந்த 2016ல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் நீரின்றி வறண்டன. இதனால், மக்களின் தேவைகளுக்காக விவசாய கிணறுகள், கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி, சுத்திகரித்து மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள ஏரிகளை கண்டறிந்து மீண்டும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு அரசு செய்தது. அதன்பேரில், தற்போது கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து கொரட்டூர் ஏரியை குறுகிய கால சீரமைக்கும் திட்டத்தின் கீழ், ஒண்டிவீரன் மற்றும் கலிங்கு-2 ஆகிய உள்வாய்களில் ெரகுலெட்டர் கட்டுதல் மற்றும் அம்பத்தூர் உபரி நீர் கால்வாயில் கலக்கும் சட்ட விரோதமான கழிவுநீர் கால்வாய்களை அடைத்தல், 2,930 மீ. நீளத்திற்கு வேலி அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ₹2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நீர்வளத்துறை சார்பில் இதற்காக ஜூலை 14ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்து, ஆகஸ்ட் முதல்வாரத்தில் இருந்து பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>