×

சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீஸ் சோதனை பெண் சிஷ்யை அதிரடி கைது

சென்னை: சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி ஹாட் டிஸ்க்குகள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மாணவிகளை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்ற சிஷ்யை கைது செய்யப்பட்டார். சென்னை    அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு சாமியார் சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் அளிப்பதாக கூறி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வந்த புகார்களின் பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் அவ்வப்போது சிவசங்கர் பாபா தங்கியிருந்த அறை, சுசில்ஹரி பள்ளி, ராமராஜ்ய வளாகம், சம்ரட்சணா ஆசிரமம் ஆகிய இடங்களை சோதனையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று 5வது நாளாக சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர்.   சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும், பென் டிரைவ், ஹாட் டிஸ்க்குகள், சிசிடிவி கேமராவின் காட்சிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை முடிந்த பின்னர் வெளியே வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த பெற்றோர்களிடம் பேசினார்.

ஏன் இவ்வளவு நேரம் நின்றிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பெற்றோர் நாங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் 50 ஆயிரத்திற்கும் மேல் ஆண்டுக் கட்டணம் செலுத்தி பள்ளியில் சேர்த்துள்ளோம். ஆனால், பெற்றோர்களாகிய எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மெயின் கேட்டுக்கு வெளியே நிறுத்தி விடுகின்றனர். உட்கார சாதாரண நாற்காலியோ, குடிக்கத் தண்ணீரோ கூட வழங்கப்படுவதில்லை. இதனால், நாங்கள் ஏதோ தப்பு செய்து விட்டு வந்தவர்கள் போல் நடத்தப்படுகிறோம். பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லை செய்த சாமியாருக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் அது மற்ற சாமியார்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று ஆவேசத்துடன் கூறினர்.

இதையடுத்து, எஸ்.பி. விஜயகுமார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பெற்றோர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும் அவர்கள் கேட்கும் சான்றிதழ்களை விரைந்து வழங்குமாறும் அறிவுறுத்தி விட்டுச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சோதனை முடிந்து போலீசாரும் சென்றனர்.  இந்தநிலையில், பள்ளியில் 2012ம் ஆண்டு படித்த மாணவி ஒருவர் சிபிசிஐடி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் சுசில் ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி சுஷ்மிதா (30). கல்லூரியில் சேர்ந்த பின்னரும் பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்வார். மாணவிகளை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். இதனால் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். சுஷ்மிதா அடிக்கடி மாணவிகளை பாபா அறைக்கு அழைத்துச் செல்வதை நான் பார்த்துள்ளேன். ஒரு நாள் என்னையும் பாபாவின் ரகசிய அறைக்கு அழைத்துச் சென்றார். நான் பாபா அறைக்குள் சென்றதும், சுஷ்மிதா வெளியில் சென்று விட்டார்.

 பாபாதான் என்னை அருகில் அழைத்தார். பின்னர் வாயை கழுவி விட்டு வரும்படி கூறினார். நான் வாயை கழுவி விட்டு வந்தபோது, திடீரென கட்டிப் பிடித்து வாயில் முத்தம் கொடுத்து விட்டார். நான் பயந்து அலறினேன். ஆனால் என்னை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டார். இதனால் அவரது பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. பின்னர், முத்தம் கொடுத்தபடி கண்ட இடங்களில் கை வைத்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான், வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அனுப்பினார். சிவசங்கர்பாபாவின் அறைக்கு வெளியே சுஷ்மிதா நின்று கொண்டிருந்தார். அவரும் அறைக்குள் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் உனக்கு மட்டும் இல்லை. உன் குடும்பத்துக்கும் ஆபத்து என்று மிரட்டி அனுப்பினார்.

அதன்பின்னர் பள்ளி படிப்பை முடித்த பிறகு நான் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் புகாரில் சுஷ்மிதாவை, சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் செங்கல்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு நேற்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டுவந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர், நேற்று மாலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : CBCID ,Sivashankar ,Baba ,Ashram , CBCID police raid female student at Sivashankar Baba Ashram
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...