×

மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ₹80,000 கோடி வருவாய் இழப்பு: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை: மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக வணிகவரித்துறை சார்பில் மதுரை மண்டல வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.  கூட்டத்திற்கு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து பேசும்போது, ‘‘முதல்வரின் உத்தரவின்பேரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வணிகர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துகள் கேட்டு, புகார்கள், குறைகள் நிவர்த்தி செய்யப்படும். விரைவில் இத்துறை சார்பில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட உள்ளது. கடந்தாண்டு வணிகவரித்துறை மூலம் ரூ.96 ஆயிரம் கோடியும், பத்திரப்பதிவு மூலம் ரூ.10 ஆயிரம் கோடியும் மட்டுமே அரசுக்கு வருமானம் கிடைத்தது.

வணிகம் செய்வோர் இடையூறின்றி வணிகம் மேற்கொள்ளலாம். முதலீடின்றி, உற்பத்தி  மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையே இடைத்தரகர்கள் போல் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’’’ என்றார். கூட்டத்தில், நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்து பேசும்போது, ‘‘மத்திய அரசின் வரிக்கொள்கையால் மாநில அரசுகள் சுய வருமானத்தை இழந்து விட்டன. தமிழகம் 4 சதவீதத்தை இழந்துள்ளது.  இது மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடியாகும்.  கொரோனா நிவாரண நிதி கொடுத்ததால் ரூ.9 ஆயிரம் கோடி செலவு, பெண்கள் இலவச பஸ் பயணத்தால் ரூ.1,200 கோடி செலவு இவையெல்லாம் அரசுக்கு ஒரு இழப்பே கிடையாது. டாஸ்மாக்கில் வரும் ரூ.35 ஆயிரம் கோடியை வைத்துதான் தமிழக அரசு இயங்குவதாக கூறுகின்றனர்.

மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.80 ஆயிரம் கோடி வருமானம், மத்திய அரசிடமிருந்து வந்தால் எதற்காக டாஸ்மாக் வருமானம்?  நல்ல மேலாண்மை, கொள்கைக்காக, அடிப்படை தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் இருக்கும்போது, குறுக்கு வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டமைப்பின்படி நேரடி வரிவிதிப்பு எல்லாம் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளது. மாநில அரசிடம் அந்த உரிமை இல்லை. மறைமுக வரியை வைத்துதான் அரசு நடத்த வேண்டியுள்ளது. நேர்முக வரியாக 52 சதவீதமும், மறைமுக வரியாக 48 சதவீதம் என இருந்தது. ஒன்றிய அரசு, நேர்முக வரியை 60 சதவீதமாக உயர்த்திவிட்டது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குகிறது. விரைவில் திருத்தப்பட்ட வரவு செலவு அறிக்கை தாக்கல் ஆகும். வணிகர்களுக்காக பல நல்ல முடிவுகளை முதல்வர் அறிவிப்பார்’’ என்றார்.



Tags : Tamil Nadu ,Central Government ,Finance Minister ,PDR Palanivel Thiagarajan , 80,000 crore revenue loss to Tamil Nadu due to central government tax policy: Finance Minister PDR Palanivel Thiagarajan
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து...