×

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 500 கோடியில் 5 இடங்களில் மேம்பாலங்கள்: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை  முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூ.500 கோடியில் 5 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனால், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், செம்மஞ்சேரி, சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். மேலும், புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை மாநகருக்கு வேலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இதனால், இசிஆர், ஓம்ஆர் சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2010ல் திமுக ஆட்சி காலத்தில் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, பெருங்குடி எம்ஜிஆர் சாலை சந்திப்பு, பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம்- சோழிங்நல்லூர் சந்திப்பு, சிறுசேரி முதல் சிப்காட் சந்திப்பு ஆகிய 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்தது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.   ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த திட்டம் கைவிடப்பட்டன. இதை தொடர்ந்து, அந்த 5 இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு பதிலாக உயர்மட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த திட்டமும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருவதால் தினமும் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ.500 கோடியில் 5 இடங்களில் பல்வழிச்சாலை மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று புதிதாக மேம்பாலங்கள் அமையவுள்ள 5 இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 தொடர்ந்து அவர், சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடியில் இந்திரா நகர் சாலை சந்திப்பு டைடல் பார்க் சந்திப்புகளில் நடைபெற்று வரும் ‘யு’ வடிவ மேம்பாலங்கள், ஈசிஆர் சாலைப்பிரிவில் நடைமேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்படும் கூடுதல் பாலம் ஆகியவற்றினை ஆய்வு செய்தார். அப்போது,  மேம்பால பணிகளை விரைவுபடுத்திட பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ெதாடர்ந்து அவர், ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைபாக்கம் சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை சுங்கச் சாவடிகளை ஆய்வு செய்து அவற்றில் பொதுமக்கள் சந்திக்கும் குறைகளை களைய தேவையான நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.   மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் ரூ.234 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளையும், சென்னை வெளிவட்ட சாலையில் ரூ.1081 கோடியில் முடிக்கப்பட்ட சாலைப்பணிகளை ஆய்வு செய்து தடைப்பட்டுள்ள சிறு சிறு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இச்சாலையில் கட்டமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிக்களையும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்து பொது மக்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாகாமல் சுங்க சாவடிகளை கடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  பின்னர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி  வரை முக்கியமான 5 சாலைகளின் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 2010ம் ஆண்டு  நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதற்கான நிதியையும் திமுக அரசு ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டது.  

வளர்ந்து வரும் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும் மீண்டும் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்ட அலுவலர்களுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை எல்லைக்குள் உள்ள 4 சுங்கச் சாவடிகள் தேவையில்லை எனவும் அதை அகற்ற வேண்டும் எனவும் கடந்த காலங்களில் பொதுமக்கள் பெரிய போராட்டங்களை நடத்தினர்.  இந்த சுங்கச் சாவடிகளை அகற்றினால் அரசுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகள் என்ன என்பதை நேரில் சென்று துறை அலுவலர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துக்களை கேட்டறிந்தேன் இதுகுறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த 4 சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.   இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சாந்தி, சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளர்  ஞானசேகர், சென்னை பெருநகர அலகு தலைமைப் பொறியாளர் சுமதி, கண்காணிப்பு பொறியாளர்  இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Chennai ,Central Kailash ,Siruseri ,Highways Minister ,EV Velu , 500 crore flyovers from Central Kailash to Siruseri to put an end to traffic congestion in Chennai: Highways Minister EV Velu
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...