×

தமிழக தேர்தலில் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: டெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 7ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் காலை டெல்லி சென்றார். அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ”கொரோனா தடுப்பூசி தேவைக்கு வழங்குதல், செங்கல்பட்டு மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் தடுப்பூசி நிறுவனங்களில் உடனடியாக உற்பத்தி தொடங்குவது,  நீட் தேர்வு ரத்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்,

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது குறித்தும், அதேபோன்று மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினார். மேலும். 30 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது அதுகுறித்த கோரிக்கை மனுவையும் அவரிடம் வழங்கினார்.  இதையடுத்து, அனைத்தையும் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் உறுதியளித்துள்ளார் என நிருபர்கள் சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர், டெல்லி சாணக்கியாபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கிருந்தார். இதை தொடர்ந்து அரசு முறை பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

அதன்படி நேற்று காலை சரியாக 10 மணிக்கு புதிய தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட  முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி அக்பர் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு சென்றார். அப்போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார். இதில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இதில், முக்கியமாக இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கு சால்வை மற்றும் ‘ஜார்னி ஆப் ஏ சிவிலைசேஷன்’ என்ற வரலாற்று புத்தகம் ஆகியவற்றை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கும் சால்வை கொடுத்து மரியாதை செலுத்தினார்.

அதேபோன்று, சோனியா காந்தியும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் மரியாதை நிமித்தமாக சால்வை வழங்கினார். இதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நேராக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் டெல்லி அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.

நூலில் இருப்பது என்ன?
காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த நூலின் பெயர் -  Journey of A Civilization;  Indus to vaigai. தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வரலாற்றாய்வாளருமான  ஆர்.பாலகிருஷ்ணன் எழுதியது. சிந்துவெளி மக்கள் மொழி, திராவிட மொழியின் ஒற்றுமைத்தன்மையை பரந்த ஆய்வுநோக்கில் பேசுகிறது இந்த நூல். சிந்துவெளியுடனான பண்டைத் தமிழர்களின் தொடர்பு குறித்த விரிவான தகவல்கள் அடங்கியது. இந்திய பண்பாட்டின் வேர்களையும் அலசுகிறது.

பண்டைத் தமிழர்களுக்கும்,  சிந்துவெளிக்குமான தொடர்பை சங்க இலக்கியங்கள் வழி அறியலாம் எனவும் காட்டுகிறது. தமிழ்மொழி ஆய்வு தொடர்பான சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இந் நூல் கருதப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்ததை தொடர்ந்து இந்நூல் இப்போது மிகுந்த கவனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பலரும் நூல் குறித்து இணையங்களில் பல்வேறு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

ராகுல் நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘‘இன்று (நேற்று) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நானும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தமிழக மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.


கார் ஓட்டி வந்த ராகுல்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்திக்க அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றபோது, ராகுல் காந்தி அவரது இல்லத்தில் இருந்தார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ள தகவலை அறிந்து பாதுகாப்பு என்று எதனையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் அவரே தனது காரை ஓட்டிக்கொண்டு சோனியா காந்தி இல்லத்திற்கு வந்தார். பின்னர் தான், அவருக்கான பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பழைய தமிழ்நாடு இல்லத்தில் ஆய்வு
புதிய தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் இருக்கும் பழைய தமிழ்நாடு இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தற்போது அங்கு இருக்கும் பழைய கட்டிடங்களை நீக்கிவிட்டு புதிய கட்டிடம் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிய வருகிறது. தொடர்ந்து, அதற்கான வரையறை என்ன, மொத்த தொகை எவ்வளவு ஆகும் என்பது குறித்தெல்லாம் விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : MK Stalin ,Sonia ,Rahul ,Tamil Nadu elections , MK Stalin's meeting with Sonia and Rahul after the landslide victory in the Tamil Nadu elections: consultation on the political situation
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...