கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு அதிகம்; அதிகம் கூட்டம் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டாம்: குமரி மருத்துவக்குழு அறிவுரை

நாகர்கோவில்: கொரோனாவின் 3வது அலை தாக்கம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாததால் திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் உள்பட அதிகம் கூட்டம் சேரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு மருத்துவக்குழு அறிவுரை கூறி உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனாவின் 2 வது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், 3 வது அலையை எதிர் கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், குமரி மாவட்ட மருத்துவ குழு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, சுகாதார துறை இணை இயக்குனர் பிரகலாதன், துணை இயக்குனர் கிருஷ்ண லீலா, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் திருவேங்கடமணி, கொரோனா நோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரின்ஸ் பயஸ், உலக சுகாதார நிறுவன பிரதிநிதி டாக்டர் பால கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ குழு மற்றும் சுகாதார துறையினர் தெரிவித்த அறிவுரைகள் வருமாறு :

* கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாம் அலை வந்துள்ளது. அடுத்து மூன்றாவது அலை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நமக்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். மரணம் குறைவாக இருக்க வேண்டும் என்றால் கவனம் அதிகரிக்க வேண்டும்.

* கடந்த ஆண்டு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த பெரும் சிரமம் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் உள்ளது.

* சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற எல்லா விஷயத்திலும் விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க முடியும்.

* 2 வது அலையில் கொரோனா பரவல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் காணப்பட்டது. 3 வது அலை 20 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை இருந்தால் எளிதில் தற்காத்து கொள்ள முடியும்.

* குறிப்பாக குழந்தைகளை திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் உள்பட அதிகம் கூட்டம் சேரும் இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டாம். குளிர்சாதன வசதிகள் கொண்ட நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது.

* குழந்தைகளை நாள் ஒன்றுக்கு 2 முறை குளிப்பாட்ட வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவது குறித்து குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளக்க வேண்டும்.

* வெளியில் சென்று விட்டு வரும் பெரியவர்கள் நன்றாக கை, கால்களை கழுவிய பின் தான் குழந்தைகளை தொட வேண்டும்.

* வீட்டில் யாருக்காவது பெரியவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளை நெருங்க விட கூடாது.

* குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது. 2022 ல் தான் குழந்தைகளக்கு தடுப்பூசி அனுமதிக்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பூசி போடாத 5 முதல் 17 வயதுக்குள் உள்ளவர்கள் தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற வாய்ப்பு உள்ளது.

* குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். வைரஸ் புதியது. அதனால் இது குழந்தைகளை பாதிக்காது என்று கூற முடியாது.

* கொரோனா ெதாற்றுக்கு நேரடி சிகிச்சை இல்லை. உதவி சிகிச்சை தான் உள்ளது. எனவே நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. நன்றாக சாப்பிட வேண்டும், ஓய்வெடுக்க வேண்டும்.

* டெங்குக்கு 100 சதவீதம் இறப்பை தடுக்கும் சிகிச்சை உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு அந்த சிகிச்சை இல்லை. கொரோனா வைரஸ் துகள்கள் காற்றில் 3 மணி நேரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிடத்தில் வந்து சென்றவர்கள் இருமி சென்றால் அந்த இடத்தில் அவர் இல்லாமல் இருந்தாலும் மூன்று மணி நேரத்திற்குள் அந்த பகுதியில் சென்றவர் அந்த காற்றை சுவாசித்தால் அவருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் அவசியம். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories:

>