திருவொற்றியூரில் பரபரப்பு: சிறுமியை மணந்த வாலிபர் போக்சோவில் அதிரடி கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 16 வயது சிறுமியை மணந்து கொண்ட வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (29). இவர் திருவொற்றியூர், ராமசாமி நகரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது உறவினர் வீட்டின் எதிரே மற்றொரு வீட்டில் வசிக்கும் 16 வயது உறவுக்கார சிறுமியுடன் ராஜீவ்காந்திக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக உருமாற, அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மணலி விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகாரின்பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள் திருமணம் முடிந்துவிட்டது. இதையடுத்து புது மாப்பிள்ளை ராஜீவ்காந்தியை குழந்தைகள் திருமண தடுப்பு (போக்சோ) சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: