சென்னை - பெங்களூரு 6 வழிச்சாலைக்கு ரூ.312 கோடி இழப்பீடு பெற்றதில் முறைகேடு!: அரசு நிலத்துக்கு போலி பட்டா...குஜராத் புள்ளி மீது வழக்கு..!!

சென்னை: சென்னை - பெங்களூரு 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதில் 312 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் குஜராத் புள்ளி மீது வழக்கு பாய்ந்துள்ளது. அரசு நிலத்தை போலி பட்டாக்கள் மூலம் வளைத்த அவர், அதிகாரிகள் துணையோடு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி காட்டி கூடுதல் இழப்பீடு பெற்றது தெரியவந்துள்ளது. 

அதற்கு துணைபோன அதிகாரிகளும் கைதாகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 4ஐ அகலப்படுத்தி 6 வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை இழப்பீடுகளை வழங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பீமன்தாங்கல் கிராமத்துக்கு மட்டும் 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 

அங்கு அரசு நிலத்தை போலி பட்டா மூலம் வளைத்து இழப்பீடு பெற்றது பின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு சென்றுள்ளது.  பீமன்தாங்கலை தொடர்ந்து பெண்ணனூர் கிராமத்தினர் 48 கோடி ரூபாயும், ஸ்ரீபெரும்புதூர் 13 கோடி, ஏனத்தூர் 3 கோடி, வேடல் 1 கோடி மற்றும் தாமல் கிராமத்தினர் 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 312 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றுள்ளனர். 

அதுதவிர மேலும் 31 வழியோர கிராமங்களும் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் வருகின்றன. அரசின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி காட்டி அதிக இழப்பீடு பெற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கு துணைபோன அதிகாரிகளை தண்டிக்கும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 6 வழிச்சாலைக்காக பீமன்தாங்கல் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அதற்காக அந்த பகுதியில் கூடுதலாக எடுக்கப்பட்ட 7.5 ஏக்கர் நிலத்துக்கு சென்னையை சேர்ந்த அஜீஸ் மேத்தா 33 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுள்ளார். ஆனால் அந்த நிலம் தம்முடையது தான் என்றும் தனக்கே இழப்பீடு தொகை சேர வேண்டும் என நவகோட்டை நாராயணன் என்பவர் போர்க்கொடி தூக்கினார். அதன் பேரில் காஞ்சி மாவட்ட நிர்வாகம் ஆவணங்களை சோதித்த போது தான் அது அரசின் அநாமத்தைய நிலம் என்பது தெரியவந்தது. 

1962ம் ஆண்டுக்கான அரசின் செட்டில்மண்ட் ஆவணம், 1987ம் ஆண்டின் அரசின் ஆ பதிவு ஆகியவற்றில் மேய்ச்சல் நிலம் என காட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அஜீஸ் மேத்தாவின் 7.5 ஏக்கர் மற்றும் அருகில் உள்ளவை என 45 ஏக்கர் நிலத்துக்கான போலி பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து அவற்றை மீண்டும் அரசு நிலமாக வகைப்படுத்தியுள்ளார். அஜீஸ் மேத்தா மற்றும் அவருக்கு துணைபோன அதிகாரிகள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. 

சென்னை - பெங்களூரு 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி பல கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி பூவிருந்தமல்லியில் தொடங்கி வாலாஜா வரை 93 கிலோ மீட்டருக்கான பணி மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் 10 உயர்த்தப்பட்ட பாலங்கள் கட்டப்படுகின்றன. 

இதேபோல் வாலாஜா - கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி - ஓசூர், ஓசூர் பெங்களூரு என சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு வழங்கியதில் முறைகேடுகள் அரங்கேறி இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் மையமாக உள்ள அஜீஸ் மேத்தா, குஜராத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரை விசாரிப்பதன் மூலம் இத்திட்டத்தின் மொத்த மோசடிகளும் அம்பலமாக வாய்ப்புள்ளது.

Related Stories:

>